Tuesday 1 July 2014

Thoduvaanam Part 6

                                                                    தொடுவானம்

                                                                     டாக்டர் ஜி. ஜான்சன்
          6  வெற்றி மீது வெற்றி
          வெறும் புத்தகப் புழுவாகவே இருந்து பழக்கப் பட்டுவிட்டவன் நான். படிப்பில் மட்டுமே சிறந்து விளங்கிய நான் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள முடியவில்லையே என்ற மனக் குறை என்னுள் இருந்தது. ஓட்டப் பந்தயங்களில் ஓடி பரிசுகள் பெற வேண்டும் என்ற ஆவல் எனக்கு நிறையவே இருந்தது.ஆனால் வெட்கமும் அச்சமும் அதைத் தடுத்தது.
          தேர்வு எழுதுவது யாருக்கும் தெரியாமல் செய்வதாகும். அது எளிது. ஆனால் பந்தயத்தில் ஓடுவதை பலர் பார்ப்பார்கள். அதில் வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதும் பலர் மத்தியில் நிகழ்வதாகும். அங்கு தோல்வியுற்றால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் தேவை. ஒருவேளை அதனால் பயந்தேனோ என்பது தெரியவில்லை. ஆனால் அப்பாவும் அதனால் படிப்பு  கெடும் என்று நிச்சயம் தடுத்திருப்பார் என்பதும் எனக்குத் தெரியும்.
          உயர்நிலைப் பள்ளியில் முகமது நூர் என்ற மலாய் பையன் எனக்கு தோழனானான். அவன் நன்றாக ஓடுபவன். பல பரிசுகள் வென்றவன். அவனிடம் என் பிரச்னையைக் கூறினேன்.
          " நீ வெட்கப்படாமல் தினமும் மாலையில் நம்முடைய பள்ளித் திடலில் ஓடி பயிற்சி செய். உனக்கு நீண்ட கால்கள் உள்ளன. நிச்சயமாக நீ சிறந்த ஓட்டக்காரனாக வர முடியும். நான் அப்படிதான் இன்னும் பயிற்சி செய்கிறேன். நீயும் என்னோடு சேர்ந்து கொள். " அவன் ஊக்குவித்தான்.
          மாலையில் பயிற்சி என்றால் மீண்டும் பள்ளி வரவேண்டும். அதற்கு அப்பா சம்மதிக்கணும். மீண்டும் பேருந்துக்கு காசு தரமாட்டார். அதற்கு வேண்டுமானால் கோவிந்தசாமியின் சைக்கிளைப் பயன்படுத்தலாம்.
          மலையில் உடற்பயிற்சிக்கு கட்டாயம் வரவேண்டும் என்று உடற்பயிற்சி ஆசிரியர் சொன்னதாக அப்பாவிடம் கூறினேன். அவர் தயங்கியபடி சம்மதித்தார்.
          உடற்பயிற்சி ஆசிரியரின் பெயர் பெஸ்த்தானா. அவர் ஓர் ஆங்கிலேயர். என்னை திடலில் பார்த்த அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தினமும் மாலையில் முறையான பயிற்சி அளித்தார். அந்தத் திடலில் நானூறு மீட்டர் ஓடும் பாதை இருந்தது. அன்றாடம் அதில் பத்து சுற்றுகள் ஓடுவேன். வேறு விதமான பயிற்சிகளும் கற்றுத் தந்தார்
        நான ஓடுவதைப் பார்த்த அவர் என்னை நெடுந்தொலைவு  .ஓட்டங்களில் கவனம் செலுத்துமாறு கூறினார். நானும் அவரின் மேற்பார்வையில் நாளுக்கு நாள் நன்றாக ஓட்டத்தில் முன்னேற்றம் கண்டேன்.
           அந்த வருடம் மூன்று மைல் ஓட்டப்பந்தயம் ஏற்பாடாகியிருந்தது. அதற்கு " ஊர் குறுக்கே ஓடும் பந்தயம் " ( Cross Country Race ) என்று பெயர். அது விளயாட்டுத் திடலில் நடைபெறாது.
          சிங்கப்பூரின் பெரிய நீர்த் தேக்கத்தில் நடைபெற்றது. மேக்ரிட்சி நீர்த் தேக்கம் அழகான இயற்கை வளங்களுடன் காட்டுப் பகுதியில் உள்ளது. மலைகள், ஆழ்ந்த பள்ளத்தாக்குகள், சிறு கால்வாய்கள் ,சேற்றுக் குட்டைகள் ஆகிய அனைத்தையும் கடந்து அந்த காட்டுப் பாதையில் மூன்று மைல்கள் ஓடவேண்டும்.
          மொத்தம் இருநூறு பேர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டோம். நான் ஐந்தாவதாக ஓடி முடித்தேன்! எனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
          முதல் இருபது பேர்கள் பள்ளியின் சார்பாக மாவட்ட அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். அதில் நான் ஏழாவதாக வென்றேன்! எனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.இது பெரிய சாதனையாகும்.
        மாவட்டப் போட்டியில் வென்ற முதல் முப்பது பேர்களை அகில சிங்கப்பூர் பந்தயத்திற்கு அனுப்பினர். அதில் நான் எட்டாவதாக வென்றேன்! இது அதைவிட பெரிய சாதனை! வட்டார சின்னம் பொறிக்கப்பட்ட பனியனை அணிந்துகொண்டு பலர் மத்தியில் ஓடி வெள்ளிக் கிண்ணம் பரிசு பெற்றது இன்பமான அனுபவம்!
          அவ்வருட பள்ளி ஒட்டப்பந்தயத்தில் நான் நானூறு மீட்டர், எண்ணூறு மீட்டர், ஆயிரத்து ஐநூறு மீட்டர், ஐயாயிரம் மீட்டர் பந்தயங்களில் ஓடி வெற்றி வாகைச் சூடி முதல் பரிசுகள் வென்றேன்.
         சிறந்த ஓட்டப் பந்தய வீரன் என்ற தலைப்புடன் என்னுடைய புகைப் படம் ' ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ' ( Straits Times ) ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்தது!
         பரிசுக் கிண்ணங்களை லதாவிடம் காட்டி மகிழ்ந்தேன்.
          அப்பாவோ அவற்றைப் பார்த்து மகிழ்வதாகக் காட்டிக் கொண்டாலும், முதல் மாணவனாக வர இவையெல்லாம் தடையாகும் என்றுதான் கூறினார்.
          மாலையில்தானே ஓடி பயிற்சி செய்கிறேன், அதனால் படிப்பு கெடாது என்று நான் சமாதானம் சொன்னேன்.
          இவ்வாறு உடற்பயிற்சியில் ஈடுபடுவது பரிசுகளைப் பெறுவதோடு உடல் உறுதிக்கும் நல்லது என்பதை அவர் ஏற்க மறுத்தார்.
          அதே வேளையில் நான் மாலைகளில் பள்ளி சென்று விடுவது அவருக்கு வேறு விதத்தில் நிம்மதி தந்திருக்கலாம். நான் லதாவைப் பார்க்க முடியாது என்ற தைரியம் அவருக்கு!
          அவருடைய எண்ணமெல்லாம் வகுப்பில் நான் முதல் மாணவனாகத் திகழ வேண்டும் என்பதே. அது எனக்குத் தெரியாமல் இல்லை. என்னுடைய விருப்பப்படி படிக்க விட்டால் என்னால் முடியும் என்று நம்பினேன்,
          புத்தகப் புழுவாக மட்டும் இருந்த நான் ஓட்டப் பந்தயங்களில் புகழ் பெற முடிந்தது கடின உழைப்பேதான் என்பது அப்போது தெரிந்தது.
          அவ்வாறு எந்தத் துறையிலும் ஆர்வம் கொண்டாலும் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி உண்டு என்பதை அப்போதே நான் தெரிந்து கொண்டேன்.
          உயர்நிலைப் பள்ளி பருவத்திலேயே பல துறைகளில் சாதனைகள் புரிய வேண்டும் என்றும் சபதம் கொண்டேன்.
          ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வகுப்புக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
          தமிழ் ஆசிரியரின் பெயர் ஏ. ஜே. டேவிட். பள்ளியிலேயே மிகவும் வயதான ஆசிரியர் அவர்தான். ஆரம்பப் பள்ளிபோல் இங்கும் நானே தமிழில் சிறந்து விளங்கினேன்.
          மார்ச் மாதத்தில் அகில சிங்கப்பூர் ரீதியில் ஒரு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது. அது ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ் என நான்கு மொழிகளிலும் நடைபெற்றது. சீன கிறிஸ்துவ இளைஞர் சங்கத்தால் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
          ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியும் இரண்டு மாணவர்களை அனுப்பவேண்டும். மூத்தவர் பிரிவில் சாத்தப்பனையும் இளையவர் பிரிவில் என்னையும் தேர்ந்தெடுத்தார் ஆசிரியர் டேவிட்.
           போட்டியில் பங்கு பெறுபவர்கள் அனைவரும் விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில் கூடினோம். வகுப்பறையில் அமர்ந்த பின்புதான் தலைப்பு தரப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தலைப்புகள் தரப்பட்டன.
            எனக்குக் கிடைத்த தலைப்பு, " நன் மாணாக்கன் எனப் பேர் எடுப்பது எப்படி? " என்பது.
           மாணவர்களின் கடமைகளையும், அவர்கள் படிப்பில் செலுத்த வேண்டிய கவனத்தையும், கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளையும் மையமாக வைத்து நான்கு பக்கங்கள் எழுதினேன். இந்தப் போட்டி ஒரு தேர்வு எழுதுவது போன்றுதான் இருந்தது.
          25. 5. 1960 ஆம் தேதியன்று ' தமிழ் முரசு ' நாளேட்டை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு பக்கத்தில், " நான்கு மொழிக் கட்டுரைப் போட்டி: தமிழ்ப் பகுதியில் வெற்றி பெற்றோர் " என்ற தலைப்பு கண்டு கண்களைச் செலுத்தினேன். எனக்கு இரண்டாவது பரிசு என்பதை அறிந்து எல்லையில்லா இன்பம் கொண்டேன். மூத்தவர் பிரிவில் சாத்தப்பனுக்கு முதல் பரிசு கிடைத்திருந்தது.
          மொத்தத்தில் நாற்பத்தியிரண்டு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றிரண்டு மாணவர்கள் கலந்து கொண்ட போட்டி. இதில் வெற்றி பெற்றது பெரும் சாதனையே!
          பள்ளியின் வாராந்திரப் பொதுக் கூட்டத்தில் எங்கள் இருவரின் பெயர்கள் வாசிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
          பரிசளிப்பு விழா, சீன கிறிஸ்துவ இளைஞர் சங்கத்தில் நடைபெற்றது. விருந்துக்குப்பின் பரிசுகள் வழங்கினர். புகைப்படங்கள் எடுத்தனர்.
         எங்கள் கட்டுரைகளைப் படித்து தேர்வு செய்தவர் திரு. வை. திருநாவுக்கரசு, தமிழ் முரசின் துணை ஆசிரியர்.
          எங்கள் இருவரின் கட்டுரைகளும் தரமானவை என்றும், ஆங்கிலப் பள்ளியில் பயின்றாலும் தமிழ் மாணவர்களின் கைத்திறனைக் கண்டு தான் வியந்ததாகக் கூறினார்.
          கலைகளில் சிறந்தது எழுத்துக் கலை என்றும், எங்களை இதுபோன்று தொடர்ந்து தரமானவற்றை எழுதி தமிழ் முரசுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
( தொடுவானம் தொடரும் )

Saturday 28 June 2014

Thoduvaanam Part 5.

                                                                 தொடுவானம்

                                                                டாக்டர் ஜி. ஜான்சன்
4. உன்னோடு நான் எப்போதும்

நாங்கள் வீடு மாறிய போது லதா அனாதை போல் நின்று கையசைத்து விடை தந்தது அடிக்கடி என் மனதில் தோன்றி மறையும். தூக்கத்தில் கனவில் அந்தக் காட்சி தோன்றும்.
அப்பா எப்போதாவது வெளியில் செல்ல நேர்ந்தால் உடன் புறப்பட்டு அவள் வீடு சென்று விடுவேன்.
அவளின் பெற்றோர் என் நிலை கண்டு வருந்தினர். அவளுடைய அம்மா என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். நான் நன்றாகப் படிக்கிறேன் என்பதால் அவளின் அப்பாவும் என் மீது அதிக அன்பு காட்டினார்.
இப்படி முன்பின் தெரிவிக்காமல் திடீரென்று வீடு காலி செய்தது அவ்ர்களுக்கு வியப்பையும் வேதனையையும் அளித்தது. அப்பாவின் போக்கு அவர்களுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
நான் சிறுவனாக இருந்தபோது அம்மா தமிழகம் திரும்ப வேண்டிய கட்டாயம் உண்டானது. அங்கு தனியே விட்டு வந்த அண்ணனுக்கு உடல் நலமின்றி போனது.
அப்போது என் கையைப் பிடித்து அவளுடைய அம்மாவிடம் ஒப்படைத்தார்.
" என் பிள்ளையை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இனி இவன் உங்கள் பிள்ளை. " என்றுதான் கண்ணீர் மல்கக் கூறினார்.
" கவலைப் படாமல் போய் வாங்க. இவனை எங்களில் ஒருவனாகப் பார்த்துக்கொள்கிறோம் ." என்று லாதாவின் அம்மா ஆறுதல் கூறினார்.
அன்றிலிருந்து அவர்களில் ஒருவனாகத்தான் வளர்ந்தேன். லதா என்னுடைய விளையாட்டுத் தோழியானாள்.
அவ்வாறு ஆறு வருடங்கள் பள்ளியிலும் வீட்டிலும் அவள்தான் என் தோழியாக இருந்தாள்.
கள்ளங் கபடமில்லாமல் வளர்ந்த எங்களை இப்படி வேண்டுமென்றே அப்பா பிரித்து விட்டாரே! அவள் உடன் இல்லாதது பெரும் தவிப்பை உண்டுபண்ணியது.
நாங்கள் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் இந்த தவிப்பைப் பற்றியும் பேசுவோம்.
" நீ போனதிலிருந்து சரியாக சாப்பிடமுடியலை... தூங்க முடியலை....எப்போதும் உன் நினைவுதான்.....ஒரே கவலையாக உள்ளது. " என்பாள்.
" எனக்கும் அதே நிலைதான் லதா. அம்மாவும் அருகில் இல்லை. நீ இருந்தது எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. இப்போ என்ன செய்வதென்றே தெரியலை. " என்பேன்,
" இன்னும் கொஞ்ச நாளில் பரீட்சை முடிவும் வந்துடும். நீ ராபிள்ஸ் பள்ளி போவாய். நான் எந்த பள்ளியோ? இனிமேல் பள்ளிக்கு நாம் ஒன்றாகப் போக முடியாது. அடிக்கடி பார்க்கவே முடியாமல் போய்விடும். " அவள் கண்கலங்கினாள்.
ஆறாம் வகுப்புத் தேர்வுக்குப் பின் ஆண்களும் பெண்களும் தனித் தனி பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர்.
மூன்று மாதங்கள் கழித்து முடிவுகள் வந்தன. நாங்கள் இருவரும்தான் பள்ளி சென்றோம். எதிர்ப் பார்த்ததுபோல் இருவருமே நன்றாக தேர்ச்சியுற்றிருந்தோம்.
எனக்கு சிங்கப்பூரின் முதன்மையான ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளி கிடைத்திருந்தது. அவளுக்கு அவுட்ராம் உயர்நிலைப் பள்ளி.
பள்ளி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியையும் என்னை வெகுவாகப் பாராட்டினர். நான் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளதாகக் கூறினர். ராபிள்ஸ் உயநிலைப் பள்ளியில் சிங்கப்பூரிலேயே முதன்மையாகத் தேறிய நாற்பது மாணவர்களுக்குத்தான் இடம் கிடைக்கும். அந்த நாற்பது பேர்களில் நானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அனைவருமே கொண்டாடினார்!
லதா என்னைக் கட்டிப் பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியத் தெரிவித்தாள்! மாணவ மாணவிகள் அது பார்த்து கைதட்டி ஆரவாரித்தனர்.
தேர்வு முடிவுடன் பெருமிதம் பொங்க வீடு திரும்பினேன்.
அப்பா அப்போது தூங்கிக் கொண்டிருந்தார்.
" என்ன? " என்று கேட்டார்.
" எனக்கு ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் இடம் கிடைத்துள்ளது. " என்றேன்.
" வெரி குட். " அவர் குதித்தெழுந்தார்.
" அங்கும் நீ வகுப்பில் முதல் மாணவனாகத்தான் வரவேண்டும் . " ஆவல் பொங்க கூறினார்.
இப்படி என்னைத் தனிமையில் தவிக்க விட்டுவிட்டு, அங்கும் முதல் மாணவனாக வரவேண்டும் என்கிறாரே. படிக்கும் மனநிலையையும் சூழலையும் இவர் உருவாக்கித் தந்தாலே போதும் என்று எண்ணியவாறு, " சரி. " என்று தலையாட்டினேன்!
சற்று நேரத்தில் என்னுடைய முதன்மையான தேர்வு முடிவு எங்கள் வட்டார தமிழ் மக்களிடையே வேகமாகவே பரவியது. அப் பள்ளியின் சிறப்பு அப்படி!
அப் பள்ளியில் நான் முதன் முதலாகக் காலடி வைத்தது மறக்க முடியாதது. அப்போதுதான் முதன் முதலாக முழுக்கால் சட்டை அணியலானேன்! அப்போதே நான் பெரியவனாகிவிட்டேன் என்ற உணர்வு தோன்றியது. வெள்ளை மேல்சட்டையும் முழுக்கால் சட்டையுமே பள்ளியின் சீருடை. பள்ளியின் சின்னத்தை சட்டையின் இடது புறம் குத்திக்கொண்டேன்.
நான் உயரமாகவும் கட்டான உடல் அமைப்பும் கொண்டவன். சுருள் சுருளாக அடர்த்தியான கேசமும், அரும்பு மீசையும், எப்போதும் முகத்தில் புன்னகையும் உடையவன்.
அதிகாலை நான்கு மணிக்கே விழித்து பள்ளி செல்ல தயாராகிவிடுவேன். அன்றன்று கொண்டுச் செல்ல வேண்டிய நூல்களை அன்போடு நெஞ்சோடு அணைத்துக் கொண்டு பேருந்து ஏறும் இடம் சென்றுவிடுவேன்.
பேருந்து கடைசியாக நிற்கும் இடம் சூலியா ஸ்ட்ரீட். அங்கிருந்து அடுத்த பேரூந்து ஏறி பிராஸ் பாசா ரோடு செல்லவேண்டும். காசு மிச்சப்படுத்த நான் நடந்தே செல்வேன். திரும்பும்போதும் அப்படித்தான். இவ்வாறு அன்றாடம் இருபது காசுகள் சேர்த்து விடுவேன்.
ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளி சிங்கப்பூரின் முதல் உயர்நிலைப் பள்ளி. இதை சர் ஸ்ட்டம்பர்ட் ராபிள்ஸ் கட்டினார். இவர்தான் சிங்கப்பூரைக் கண்டுபிடித்தவர்,
என் வகுப்பு இரண்டாம் படிவம். மொத்தம் நாற்பது மாணவர்கள். என்னைத் தவிர அனைவரும் சீனர்கள்.அவர்கள் என்னை " இந்தியா " என்றே அழைப்பார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பள்ளியின் முதல் மாணவர். இவர்கள் மத்தியில் வகுப்பில் முதல் மாணவனாக வருவது எவ்வளவு சிரமம் என்பதை உணர்ந்தேன். ஆனாலும் தொடர்ந்து என் பாணியில் பாடங்களில் கவனம் செலுத்த முடிவு செய்தேன். மனதில் சஞ்சலம் இல்லாமால் முழு மூச்சுடன் முயன்றால் முதல் மாணவனாகலாம் என்ற நம்பிக்கையுடன் செயல் பட்டேன்.
ஆனால் என்னுடைய ஆர்வத்தையும் கவனத்தையும் தொடர்ந்து சிதறடித்து கொண்டிருந்தார் அப்பா.
அதற்குக் காரணம் லதா!
நான் விடியற் காலையிலேயே பள்ளி சென்று விடுவதால் லதாவைப் பார்ப்பது அரிதாகியது. எப்போதாவதுதான் எதிர்ப்பாராத வகையில் வீடு திரும்பும்போது சந்தித்துக் கொள்வோம். அதைப் பார்த்த சிலர் அப்பாவிடம் சொல்லியுள்ளனர்.
" அவள் இவனை விட மாட்டாள் போலிருக்கிறதே? " தனக்குத்‌தானே கூறிக்கொண்டிருந்தார்.
" நீ பள்ளி முடிந்து வரும்போது பஸ் ஸ்டாப்பில் அவளுக்கு காத்திருந்து பேசுகிறாயாமே? டீக்கடையில் சொல்கிறார்களே? " ஒரு நாள் கோபமாகவே கேட்டுவிட்டார்.
" எப்போதாவது பார்த்திருப்பேன். ' என்றேன். அதுதான் உண்மையுங்கூட.
" இனிமேல் அங்கே அவளிடம் பேசாதே. " என்று மட்டும் அப்போது கூறினார்.
மீண்டும் ஒரு முறை பார்த்தபோது நடந்தவற்றை அவளிடம் சொன்னேன். அவள் வெகுண்டெழுந்தாள்.
" வீட்டிலும் பார்க்க முடியாது. வெளியிலும் பேசக்கூடாது. நாம் என்னதான் செய்வது? நாம் எப்படிதான் பேசுவது? " கோபத்துடன் கேட்டாள்.
" என்ன செய்வது? அவர் எப்போதும் உன்னைப் பற்றியே பேசுகிறார்.உன்னால் என் படிப்பு கேடுமாம். நான் வகுப்பில் முதல் மாணவனாக வர முடியாதாம். எனக்கு எப்போதும் உன் நினைவுதானாம். படிக்கும் நேரத்திலும் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேனாம். "
" அவர் சொல்வது உண்மையா? என்னால் உன் படிப்பு கேடுமா? இத்தனை வருசமாக நாம் ஒன்றாக படித்தோமே? அப்போதெல்லாம் நீ வகுப்பில் முதலாவதாக வரவில்லையா? "
" உன்னால் என் படிப்பு கெடாது லதா. இனிமேல் இவரால்தான் படிப்பு கெடும்! "
" ஏன் அப்படி சொல்கிறாய்? நீ எப்போதும்போல் வகுப்பில் முதல் மாணவனாகவே வர வேண்டும். "
" அவர்தான் புரியாமல் பேசுகிறார் என்றால் உனக்குமா புரியவில்லை? என் வகுப்பில் எல்லாருமே அவரவர் பள்ளியின் முதல் மாணவர்கள். அவர்களுக்கும் என்னைப் போலவே முதல் மாணவனாக வர ஆசை இருக்கும். அவர்கள் எனக்கு கடுமையான போட்டி தருவார்கள். நான் நன்றாக படித்தால்தான் முதல் மாணவனாக முடியும். இவர் என்னவென்றால் எப்போது பார்த்தாலும் உன்னைச் சுட்டிக் காட்டி என் படிப்பைக் கெடுக்கிறார்! " சற்று ஆவேசமாகவே கூறினேன்.
" அப்படியானால் இனிமேல் நாம் பார்க்கவேண்டாம். " அவள் சட்டென்று கூறிவிட்டாள்.
" பின்பு நாம் எப்படி பேசுவது? உன்னிடம் பேசாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? எப்படி படிக்க முடியும்? நீ ஒருத்திதானே எனக்கு துணை? எனக்கு அம்மா கூட இங்கு இல்லையே! இங்கு இவரிடம் அனாதை போல் வாழ்கிறேன். என் மீது அன்பு செலுத்த உன்னை விட்டால் வேறு யார் உள்ளார்கள்? "
அவளின் கண்கள் கலங்கின.
" ஏன் அழுகிறாய்? " கண்களைத் துடைத்து விட்டேன்.
" நீ கவலைப் படாதே! உன்னோடு நான் எப்போதும் இருப்பேன். எங்கும் போய்விட மாட்டேன். நாம் எப்போதும் போலவே இருப்போம். சரியா? "
நான் சரியென்பதுபோல் தலையசைத்தேன்.
( தொடுவானம் தொடரும் )

Thoduvanam Part 4.

Thoduvaanam Part 3.

                                                               தொடுவானம்

                                                              டாக்டர் ஜி. ஜான்சன்

3. விலகி ஓடிய வசந்தம்.

அப்பா சொன்னது தீர்க்கதரிசனமானது!
அவர் அவ்வாறு சொன்ன மறு வாரத்தில் லதா வயதுக்கு வந்து விட்டாள்!
நான் சொல்லாமலேயே என்னுடைய அறைக்கு வருவதை அவள் நிறுத்திக் கொண்டாள்
அவளுக்கு எதேதோ சடங்குகள் செய்தனர்.
பள்ளிக்குக் கூட சில நாட்கள் அவள் வரவில்லை. நாங்கள் அலெக்சாண்ட்ரா எஸ்டேட் துவக்கப் பள்ளியில் ஒன்றாகவே நடந்து சென்று வருவோம். சுமார் மூன்று கிலோமீட்டர் அவ்வாறு நடந்து செல்ல வேண்டும். நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் பயின்றாலும் வெவ்வேறு வகுப்புகளில் இருந்தோம்.
நான் அவளின் வீடு சென்று பார்த்தபோது அவள் முகத்தில் ஒரு மாற்றம் கண்டேன். புதுப் பொலிவு போன்றிருந்தது.
அவள் முன்புபோல் என்னிடம் கலகலவென்று பேசவில்லை. என்ன பேசுவது என்று தடுமாறுவது தெரிந்தது.
" நோக்கினால் நோக்கி இறைஞ்சினாள் அக்தவள்
யாப்பினுள் அட்டிய நீர். " என்று நான் காமத்துப்பாலில் படித்துள்ளேன். அப்போது அது எனக்குப் புரியவில்லை.
ஆனால் இப்போதோ அதன் அர்த்தம் புரிந்தது. நாணம் என்பது யாது என நான் அவள் முகத்தில் கண்டு வியந்தேன்.
நாணி கோணியபடியே, " நான் வயசுக்கு வந்துட்டேன்டா! " என்று என்னிடம் கூறினாள்.
" அப்பா கூட அப்படித்தான் போன வாரமே சொன்னார். ஆமாம். வயதுக்கு வந்துவிட்டால் என்னவாகும்? "
அதுபற்றி எனக்கு ஏதும் தெரியாது.
" ஊகூம்... நான் சொல்ல மாட்டேன்டா. " என்று சொன்னவள் அறைக்குள் ஓடிவிட்டாள்.
அப்போது நாங்கள் ஆறாம் வகுப்பில் இருந்தோம். எங்கள் இருவருக்கும் வயது பன்னிரெண்டு.
பெண்களுக்கு நாணம் வரும் என்பதை நான் குறளில் படித்துள்ளேன். தமிழர் திருநாளில் திருக்குறள் மனனப் போட்டி நடந்தது. அதில் நான் பங்கு பெற்று பரிசு வென்றேன்,. அப்போது மொத்தம் நானூறு குரள்களை வரிசைப்படி மனப்பாடம் செய்திருந்தேன். அவற்றில் காமத்த்துப்பாலும் அடங்கும்.
காமத்துப்பாலில் காதல் பற்றி படித்தபோது எனக்கு சரிவர புரியவில்லை.
ஆனால் வயதுக்கு வந்துவிட்ட லதாவிடம் நான் கண்ட மாற்றங்கள் ஓரளவு காதல் பற்றி தெரியவைத்தது.
அதன்பின்பு நாங்கள் வேறு விதத்தில் பழகினோம். எங்களுக்குள் ஒருவித ஈர்ப்பு உண்டானதை உணர்ந்தோம்.
தந்தை தடை செய்திருந்த போதிலும் அவர் இல்லாத போது அவள் வந்து போய்க் கொண்டுதானிருந்தாள். அநேகமாக அது அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் நேரடியாக அதுபற்றி கேட்கவில்லை.
ஆனால் மாலையில் வேலை முடிந்து வந்ததும் முதல் கேள்வியாக, " லதா வந்தாளா? " என்பது வழக்கமானது.
நான் எப்போதும், ' இல்லை " என்றுதான் கூறுவேன். " ஆமாம் வந்தாள் " என்று உண்மையைச் சொன்னால் அவர் கோபங்கொள்வார் என்பது எனக்குத் தெரியாதா என்ன? அவர் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை.
இரண்டு வாரங்கள்தான் அவ்வாறு ஓடின.
ஒரு நாள் எங்கள் வீட்டு முன் ஒரு லாரி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய இரு சீனர்கள் ' கிடு கிடு ' வென்று எங்கள் அறைக்குள் இருந்த அத்தனை சாமான்களையும் லாரிக்குள் ஏற்றிவிட்டனர்! நான் ' திரு திரு ' வென விழித்து நின்றேன்.
அப்பாவைப் பார்த்து, " எங்கே போகிறோம்? " என்று சற்று கோபமாகவே கேட்டேன்.
" வேறு வீட்டுக்குப் போகிறோம். " என்று மட்டும் கூறிவிட்டு, சாமான்களைச் சரி பார்ப்பதில் கவனம் செலுத்தினார்.
எனக்கு துக்கம் நெஞ்சில் முட்டியது. கண்கள் கலங்கின. ஆறு வருடங்கள் வாழ்ந்த இடம்! விட்டுப் பிரிய மனமில்லை!
அதைவிட ... அதைவிட.... என் லதாவை இனிமேல் தினமும் பார்க்க முடியாதா? ஐயோ! அதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!
இது சற்றும் எதிர்ப்பார்க்காத அதிர்ச்சி! இப்படி ஆகும் என்று நாங்கள் எண்ணிப்ப்பார்க்கவில்லை!
லாரி கிளம்பியபோது லதா அங்கு வந்து சோகத்துடன் கையசைத்து விடை தந்தாள்! அப்போது அவள் திக்கற்ற ஆனாதைப்போல் காணப்பட்டாள்! சிறகொடிந்த பறவைப்போலானாள்! என் நிலையோ எல்லாவற்றையும் இழந்து போனது போலிருந்தது! துக்கத்தால் நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது!
புது வீட்டின் முன் லாரி நின்றது. அங்கிருந்து வெகு தூரம் இல்லாதது கொஞ்சம் ஆறுதல் அளித்தது. நாங்கள் இருந்தது மலையின் உச்சியில். இப்போது மலையின் அடிவாரத்தில் கம்பத்தில் அந்த பலகை வீடு இருந்தது. தகரக் கூரை போடப்பட்டிருந்தது. வெயில் காலங்களில் நிச்சயம் சூடு அதிகம் இருக்கும். ஒரே அறை என்றபோதிலும், சமைக்க வெளியில் தனியறை இருந்தது. இருந்து என்ன பயன்? லதா இல்லாமல் தனியாக அரிசியில் கல் பொறுக்கி சமைக்க வேண்டுமே! நடக்கும் தூரத்தில் தண்ணீர்க் குழாய் இருந்தது.வாளியில் தண்ணீர் கொண்டுவரலாம்.
கூளிப்பதுதான் சிரமம் .துணிகளைத் துவைப்பது அதைவிட சிரமம். வாளியில் அவற்றை எடுத்துக்கொண்டு நகரசபை வீடுகள் பக்கம் செல்ல வேண்டும். அங்குள்ள பொதுவான கழிவறைகளையும், குளியல் அறைகளையும் பயன்படுத்த வேண்டும்.
நான் அங்கு சென்ற பார்த்தபோது அது ப்ளாக் பதின்மூன்றில் இருந்தது. நல்ல வேளையாக தான் நா. கோவிந்தசாமி குடியிருந்தான். அவனும் தன்னுடைய அப்பாவுடன்தான் இருந்தான்.
அவன் நிலை இன்னும் பரிதாபமானது. சிறு வயதிலேயே தாயை இழந்தவன். தந்தை நகரசபைத் தொழிலாளிதான். தந்தை பெரியார் மீது அதிகமான பற்று கொண்டவர். கோவிந்தசாமியும் என்னுடைய பள்ளியில் பயின்றவன். கொஞ்ச நாட்கள் அக்காளுடன் தமிழகம் சென்றவன் மீண்டும் திரும்பியிருந்தான்.அங்கு அவன் குடியிருந்தது சற்று ஆறுதல் தந்தது.
ஆனால் லதாவை தினமும் எப்படிப் பார்த்து பேசுவது என்ற தவிப்பே மேலோங்கியது. அப்படி என்ன அவளுடன் பேசவேண்டும் என்பது தெரியாமலேயே, எப்படியாவது பார்த்தாலே போதும் என்ற நிலையும் உண்டானது!
துன்பம் வந்தால் தொடர்ந்து வரும் என்பார்கள். " பட்ட காலிலே படும்; கெட்டக் குடியே கெடும் " என்பது பழமொழி.
அந்த நேரம் பார்த்து துவக்கப் பள்ளியின் இறுதித் தேர்வு வந்தது. அந்த ஆறாம் வகுப்புத் தேர்வு அப்போது அதி முக்கியமானது. அதில் தேர்ச்சி பெற்றால்தான் மேற்கொண்டு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல முடியும். அதிலும் நான் வகுப்பில் முதல் மாணவன் என்பதால் அது போன்று முதல் நிலையில் தேறினால்தான் சிங்கப்பூரின் சிறந்த முதல் நாற்பது மாணவர்களுள் ஒருவனாக வர முடியும். அப்படி வந்தால்தான் சிங்கப்பூரின் சிறந்த முதல் உயர் நிலைப்பள்ளியான ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் அரசாங்கமே தேர்ந்தெடுத்து சேர்த்துக்கொள்ளும்.
நான் நன்றாக தேர்ச்சி பெறுவேன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. இந்த ஆறு வருடங்களில் நான்தான் வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்துள்ளேன். என் வகுப்புகளில் என்னைத் தவிர மற்ற அனைவருமே சீன இனத்தவர்.
முதல் வகுப்பிலேயே எனக்கு பயம் உண்டானது. எல்லா பிள்ளைகளும் சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். நான் தமிழகத்திலிருந்து வந்திருந்ததால் ஆங்கிலம் தெரியாமல் விழித்தேன்... தடுமாறினேன்!
ஆனால் காலாண்டுத் தேர்வில் ஒரு வினோதம் நடந்தது. என்னால் அதை நம்பமுடியவில்லை. வகுப்பில் நான்தான் முதல் மாணவன்!
வகுப்பு ஆசிரியை திருமதி டான், தலைமை ஆசிரியை திருமதி ஐசக் உட்பட அனைவரும் வியந்துபோயினர். அப்பாவுக்கோ பெருமிதம். அவரது சக ஆசிரியர்களிடம் சொல்லி மகிழ்ந்தார். லதா வீடு சென்று பெருமையாகப் பேசினார்.
தமிழ் நாட்டிலிருந்து வந்தவன், ஆங்கிலப் பள்ளியில் எவ்வாறு முதல் மாணவாக தேர்ச்சி பெற்றென் என்பதே அனைவரின் வியப்பாகும். அந்த வியப்பே எனக்குப் பெரும் ஊக்குவிப்பானது!
முதல் மாணவன் என்ற சிறப்பை எப்படியாவது இனிமேல் தக்க வைத்துக் கொள்ள உறுதி பூண்டேன்.
வகுப்பில் ஆசிரியை நடத்திய பாடங்களை வீடு திரும்பியதும் உடன் ஒருமுறை படித்து விடுவேன். மறு நாள் நடக்கவிருக்கும் பாடங்களையும் ஒரு முறை படித்து முடிப்பேன். அதனால் அடுத்த ஆசிரியை பாடம் நடத்துவது எளிதில் புரியும். இதையே நான் படிக்கும் பாணியாக பின்பற்றினேன்.முதல்
எந்நேரமும் படிப்பதிலும், எழுதுவதிலும் கவனம் செலுத்தினேன்.
அடுத்தடுத்த தேர்வுகளிலும் எல்லா பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று தொடர்ந்து வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்தேன். படிப்பைத் தவிர என் கவனம் வேறு எதிலும் செல்லவில்லை.
எப்போதும் கையில் புத்தகம் இருப்பதைப் பார்த்து அப்பா வியந்துபோனார்.
சாப்பிடக் கூப்பிடுவார். நான் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பேன்.
" சாப்பிட வாடா. " என்று சொல்லி அடிப்பார்.
" சாப்பிடும் நேரத்திலுமா உனக்கு படிப்பு? " என்றும் திட்டுவார்.
தொடர்ந்து வகுப்பில் மட்டுமல்லாது, எல்லா வகுப்புகளுக்கும் நானே முதல் மாணவனாகத் தேறினேன். பல பரிசுகள் பெற்றென். அவ்வாறு ஆறாம் வகுப்பு வரை நானே தலைசிறந்த மாணவனாகத் திகழ்ந்தேன்!
தேர்வு நேரத்தில் இப்படி அப்பா வீடு மாற்றிவிட்டாரே! லதாவைப் பிரிந்து மனம் குழம்புகிறதே! இது படிப்பை அல்லவா பாதிக்கும்!
தேர்வுகள் ஒரு வாரம் நடந்தன. அந்த ஒரு வாரமும் தினமும் அவளை பள்ளியில் பார்த்தேன்.
பழையபடி எங்களால் உற்சாகமாகப் பேச முடியவில்லை. இருவரின் முகத்திலும் சோகம்.
மலையிலிருந்து அவள் இறங்கி வரும்வரைக் காத்திருப்பேன். பள்ளி வரை பேசிக்கொண்டே செல்வோம். அதுபோன்று பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது மலை அடிவாரத்தில் விடை பெறுவோம்.
தேர்வுகள் முடிந்தன. அதைத் தொடர்ந்து நீண்ட விடுமுறை. அப்பாவுக்கும் பள்ளி விடுமுறை. நான் சிறை கைதியானேன்! லதாவைப் பார்க்க முடியாமல் தவித்தேன்!
தொடுவானம் தொடரும்.....

Thoduvaanam Part 2

                                                                        தொடுவானம்

                                                                       டாக்டர் ஜி. ஜான்சன்

2. விழியறிந்த முதல் கவிதை அவள்!
விமானம் அசுர வேகத்தில் ஓடு பாதையில் ஓடி வானில் எழுந்தது.
அப்போது விமானத்தினுள் மின் விளக்குகள் அணைந்தன. இரவு நேரமாதலால் வெளியிலும் காரிருள்தான். வெகு தூரத்தில் விண்மீன்கள் அழகாகப் பளிச்சிட்டன.
காதுகள் அடைத்து வலித்தன. பொத்திக்கொண்டேன்.
வானில் பறப்பது எனக்கு முதல் அனுபவம். ஒரு நீண்ட, அகலமான, அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் சொகுசாக அமர்ந்துள்ள உணர்வே உண்டானது. கொஞ்சமும் குலுங்காமல் சீராக ஒரே நிலையில் மேற்கு நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது ஏர் இந்தியா போயிங் ஜெட் விமானம்.
வேறு சூழ்நிலையில் நான் அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தால் எவ்வளவு இரசித்திருப்பேன்! ஆனால்... அப்போது நான் இருந்த நிலையோ வேறு! எல்லாமே சூன்யமான நிலை!
தமிழகம் நோக்கி பறந்து கொண்டிருந்தாலும், என்னுடைய மனம் சிங்கப்பூரையே நாடியது! அதற்குக் காரணம் ஒரு பெண். அவள்தான் என் லதா!
அவள் எனக்கு இன்று நேற்றா பழக்கம்! ஆறு வயதிலிருந்து ஒன்றாகவே என்னோடு வளர்ந்தவளாயிற்றே! அந்த பதினோரு வருட நினைவுகள் மனத்தில் பசுமரத்து ஆணியாக பதிந்து போயுள்ளதே!
விமானம் அதே நிலையில் துரிதமாக முன்னேறிக்கொண்டிருந்தது. அப்போது ஒலிபெருக்கியில் மெ ல்லியக் குரலில் விமானியின் குரல் ஒலித்தது
" இனிய இரவு பயணிகளே! நான் கேப்டன் கோபிநாத் பேசுகிறேன். ஏர் இந்தியா விமானத்தில் மெட்ராஸ் பயணம் செய்யும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன். நாம் இப்போது வங்கக் கடல் மீது மூவாயிரத்து முந்நூறு அடி உயரத்தில், மணிக்கு எண்ணூற்று ஐம்பது .கிலோ மீட்டர் வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறோம். இப்போது வெளியே வெப்ப நிலை ' மைனஸ் ' முப்பது டிகிரி செல்சியஸ். விமானத்தினுள் வெப்ப நிலை இருபத்து ஐந்து டிகிரி செல்சியஸ். இந்திய நேரப்படி சரியாக விடியற்காலை ஒன்று முப்பதுக்கு மெட்ராஸ் விமான நிலையத்தில் தரையிறங்குவோம். உங்கள் அனைவருக்கும் பிரயாணம் இனிதாக அமைய என்னுடைய வாழ்த்துகள்."
நள்ளிரவைத் தாண்டிய நேரமாதலால் பிரயாணிகளில் பலர் உறங்கிவிட்டனர்.
நானோ உறக்கத்தை சிங்கப்பூரிலேயே விட்டுவிட்டு வந்த நிலையில் இருந்தேன்!
சிந்தை முழுதும் லதா! இனி பிரிவு இல்லை என்று நம்பி ஏமாந்தோமே!
நாங்கள் காதலித்தது உண்மைதான். இல்லை என்று சொல்லவில்லை. எங்களின் வயது குறைவுதான். ஒத்துக்கொள்கிறோம். பருவம் எய்தியபோது காதல் பிறந்தது இயல்பு என நம்பினோம். தானாக மனதில் ஊற்றெடுத்த காதல் இது. காமம் அறியாத தூய காதல்!
ஒரே வீட்டில் வளர்ந்தோம். ஓடியாடி விளையாடினோம். ஒன்றாக பள்ளி சென்றோம். ஒன்றாகவே துவக்கப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றோம்.
நாங்கள் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் பழகவில்லை. அவளின் பெற்றோருக்கும் அப்பாவுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது - நாங்கள் இருவரும் ஒன்றாக வளர்ந்தது.
பின் ஏன் அப்பா இவ்வளவு மும்முரமாக மூர்க்கத்தனத்துடன் எங்களைப் பிரித்து மகிழ்ந்தார்?
அவர் என்ன செய்வார். பாவம்! தனியாகவே வாழ்ந்து பழகிவிட்டார். குடும்பத்துடன் வாழ்ந்திருந்தால்தானே உறவுகளின் அருமை தெரியும். தனி மனிதராக வாழ்ந்துவிட்டவருக்கு மகனின் மனநிலை எங்கே தெரியப்போகிறது!
லதாவை அவருக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் ஓடியாடி விளையாடுவதையும், இரவில் ஒன்றாக சேர்ந்து படிப்பதையும் கண்டு களித்தவர். அவள் சிறுமியாக இருந்தபோது மடியில் அமர்த்திக்கொண்டு கொஞ்சியவர். பள்ளி நேரம்போக மற்ற நேரங்களில் அவள் என் அறையில் இருப்பதையும் அறிந்தவர். பின் எதற்காக அவளின்மீது இந்த திடீர் வெறுப்பு?
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
வழக்கம்போல் அன்று மாலை அவர் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பினார். அவருக்கு மத்தியானப் பள்ளி. காலையில் சோறு சமைத்து குழம்பு வைத்து விடுவார்.
நாங்கள் நடு அறையில் அருகருகே உட்கார்ந்துகொண்டு அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தோம். எனக்கு காலைப் பள்ளி. அதனால் இரவில் சோறு ஆக்குவது மட்டும் என்னுடைய பொறுப்பு.
அப்போதெல்லாம் அரிசியில் நிறைய கற்கள் கலந்திருக்கும். சோற்றில் தவறி கல் தென்பட்டால் கையில் கிடைத்ததை எடுத்து என் மீது வீசிவிடுவார். அவ்வளவு கோபம் வரும்.
அதனால் கல் பொறுக்குவதில் அதிக கவனம் செலுத்துவேன். அதில் லதாவும் உதவுவாள். நான் அடி வாங்குவதை அவளால் தாங்க முடியாது. தன் மேல் விழும் அடியாகக் கருதி அழுவாள்!
நாங்கள் இருவரும் கல் பொறுக்கி சோறு வடிப்பது அப்பாவுக்கு நன்றாகத் தெரிந்ததுதான்.
ஆனால் அன்று மட்டும் ஏனோ தெரியவில்லை, எங்களைக் கண்ட அவரின் முகத்தில் ஒருவித மாற்றம் தென்பட்டது. அது எனக்குப் புரியவில்லை.
இரவு பாடங்களை லாந்தர் விளக்கொளியில் முடித்துக்கொண்டு அவள் தன்னுடைய புத்தகப் பையைத் தூக்கிகொண்டு வீடு திரும்பினாள். ஒரே வீட்டின் அடுத்த பகுதியில்தான் அவள் இருந்தாள
அப்பாவும் நானும் சாப்பிட அமர்ந்தோம்.
" தம்பி " என்றார். அவர் என்னை அப்படிதான் அழைப்பார்.
" உம் " என்றேன். நான் அவரை அப்பா என்று அழைத்ததில்லை. அந்தச் சொல்லைச் சொல்ல மனதில் கூச்சம்.
சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் என்னைத் தூக்கி வளர்த்ததில்லை. நான் அவரை முதன் முதலாகப் பார்த்ததே ஆறு வயதில். அதுவரை நான் தமிழ் நாட்டில். அவர் சிங்கப்பூரில். அம்மா கருவுற்றிருந்தபோது சிங்கப்பூர் வந்தவர் திரும்பவேயில்லை. நான் பிறந்தபோதும் என்னைப் பார்க்க வரவில்லை.
என்னை ஆறு வயதில் கூட்டி வந்த அம்மா மறு வருடத்தில் திரும்பிவிட்டார். தனியே விடப்பட்ட நான் அவருடன் எப்படியோ பதினோரு வருடங்கள் கழித்து விட்டேன்..
அவரை முதன் முறையாகப் பார்த்தபோது அப்பா என்று கூப்பிடவில்லை. அதன்பின் கடைசிவரை அவரை அப்பா என்றே அழைக்கவில்லை!
அவர் தமிழ் ஆசிரியர்தான். ஆனால் நாங்கள் வசித்ததோ அத்தாப்பு வீடு. சுவர்கள் பலகைகளால் ஆனது. லதாவின் தந்தைதான் வீட்டின் உரிமையாளர். நாங்கள் வாடகைக்கு குடியிருந்தோம்.
ஒரேயொரு நடு அறையில்தான் சமைப்பது, படிப்பது, படுப்பது எல்லாம். கட்டில், மேசை, நாற்காலி, அலமாரி, அடுப்பு - இவைதான் அந்த அறையில் இருந்தன. மின்சார விளக்கோ, விசிறியோ, வானொலியோ கிடையாது.
மரப்பலகை சுவர்களில் துவாரங்களும் விரிசல்களும் இருந்தன. எங்கள் அறையின் முன்பக்கத்தில் லதாவின் வீட்டு அறைகள் இருந்தன. அவள் வீடு திரும்பிய பின்பும் நாங்கள் அந்த விரிசல்களின் வழியாகப் பேசிக்கொள்வோம்! அது தெரிந்தும்கூட அப்பா அதுவரை ஏதும் சொன்னதில்லை.
ஆனால் அன்று சாப்பிடும்போது அவர் கூறியது எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
" தம்பி..." அவர் எதையோ சொல்லத் தயங்குவது நன்றாகவே தெரிந்தது.
நான் மீண்டும் , " உம் ? " என்றவாறு அவரை நோக்கினேன்.
" இனிமேல் லதாவிடம் இங்கே வரவேண்டாம் என்று சொல்லிவிடு. " சோற்றை சார்டின் மீனுடன் பிசைந்தபடி குனிந்த தலை நிமிராமல் கூறினார்.
" ஏன் அவள் வரக்கூடாது? அவள் என்ன செய்தாள்? " அப்பாவித்தனமாக அவரை நோக்கினேன்.
" அவள் இன்னும் சின்னப் பிள்ளை இல்லை...." பிசைந்த சோற்றை வாயில் வைக்காமலேயே தொடர்ந்தார்.
" ஏன் இல்லை ? என் வயதுதானே அவளுக்கும் ? "
" இல்லை! அவள் வயதுக்கு வரப் போகிறாள். "
நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்!
( தொடுவானம் தொடரும் )

Thoduvaanam Part 1.

                                                           தொடுவானம்

                                                           டாக்டர் ஜி. ஜான்சன்

1. மீண்டும் சந்திப்போம்

" ஏர் இந்தியா போயிங் விமானம் மெட்ராஸ் புறப்பட தயாராக உள்ளது. பயணிகள் குடிநுழைவு, சுங்கப் பரிசோதனை முடித்துக்கொண்டு பிரயாணத்துக்கு தயாராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். "
அது 1964 ஆம் வருடத்தின் இறுதி. அன்றைய சிங்கப்பூரின் பாயலேபார் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலில்தான் அவ்வாறு ஒலிபெருக்கி ஒலித்தது.
எங்கள் வட்டாரத்திலேயே நான்தான் முதல் விமானப் பயணம் மேற்கொள்ளப்போகிறேன். அப்போதெல்லாம் விமானத்தில் பயணம் செய்வதை யாரும் எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஊர் செல்பவர்கள் அனைவருமே " ரஜுலா " அல்லது " ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் " கப்பலில்தான் ஏழு நாட்கள் பிரயாணம் செய்வார்கள். ஆனால் மூன்றரை மணி நேரத்தில் சேரக்கூடிய விமானத்தின் பயணச் சீட்டின் விலையோ பன்மடங்கு அதிகமாக இருந்தது. அந்த பணத்தில் இன்னும் அதிக சாமான்கள் கொண்டு செல்லவே எண்ணுவர். கப்பல் பிரயாணத்தில் எத்தனை பெட்டிகள் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.
நாங்கள் வாழ்ந்த பகுதியில் அதிகமான தமிழர்கள் வாழ்ந்தனர். அவர்களில் பெரும்பாலோர் நகர சபையில் துப்புரவு செய்யும் கூலித் தொழிலாளர்கள்/
வீதிகள் கூட்டுதல், சாக்கடைகள் சுத்தம் செய்தல், கழிவறைகளைக் கழுவுதல், சாலைகளில் தார் போடுதல் போன்ற சாதாரண வேலைகளில்தான் பலர் இருந்தனர்.
ஆங்கிலேயர்களின் காலனித்துவக் காலத்தில் ஹென்டர்சன் மலையில் அடியிலிருந்து உச்சிவரை வீடுகளை வரிசை வரிசையாகக் கட்டித் தந்திருந்தனர். ஒரு வரிசையில் பத்து குடும்பங்கள் இருந்தன. ஒரு அறை கொண்ட வீடுகள்தான். பொதுவான சமையல் அறை ஒரு கோடியில் அமைந்திருக்கும். பொதுவான கழிவறையும் குளியல் அறையும் தனியாக கொஞ்சம் தள்ளி அமைந்திருக்கும்.
குடியிருந்தவர்களில் பெரும்பாலோர் தமிழ் நாட்டிலிருந்து தனியாக வந்தவர்கள். அவர்களின் மனைவி பிள்ளைகள், பெற்றோர் எல்லாம் தமிழ் நாட்டில்தான்.
இங்கே தற்காலிகமாகத் தங்கி சிக்கனமாக வாழ்ந்து ஊருக்கு பணம் அனுப்புவதிலேயே கண்ணுங்கருத்துமாய் இருந்தனர்.
ஒரு சிலரே இங்கே முதல் திருமணமோ அல்லது மறுமணமோ செய்துகொண்டனர். வெகு சிலரே ஊரிலிருந்து மனைவியை வரவழைத்துக் கொண்டனர்.
நான் விமானப் பயணம் மேற்கொள்வதால் என்னைப் பெரிய பணக்காரன் என்று எண்ணிவிட வேண்டாம். அப்போது எனக்கு வயது பதினேழுதான்!
நான் அந்த வட்டாரத்து தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவன். நல்ல மாணவன் சிங்கப்பூரிலேயே சிறந்த பள்ளியான ராபிள்ஸ் உயநிலைப்பள்ளி மாணவன். ஓட்டப் பந்தயங்களில் சிறந்து விளங்கியவன். ஆங்கிலப் பள்ளியில் பயின்றாலும் தமிழ் மீது தணியாத ஆர்வம் கொண்டவன். தேசிய நூலகத்தில் தமிழ் நாவல்கள் இரவல் வாங்கி தமிழ் அறிவை சொந்தமாக வளர்த்துக்கொண்டவன். சிங்கப்பூர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளம் வயது உறுப்பினன். சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் தமிழ் உட்பட அனைத்து பாடங்களிலும் சிறப்புடன் தேர்ச்சியுற்றவன். அந்த இளம் வயதிலேயே தமிழ் முரசு, தமிழ் நேசன் ஞாயிறு மலர்களில் கதைகள் கட்டுரைகள் எழுதும் இளம் எழுத்தாளன். தமிழர் திருநாளில் நாடகம் எழுதி கதாநாயகனாகவும் நடித்தவன்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட என்னை அப்பகுதி மக்கள் " வாத்தியார் மகன் " என்றே அழைத்தனர்.
என் தந்தை தமிழ் ஆசிரியர். பகுத்தறிவு சிந்தை மிக்க சில சமூகத் தலைவர்களின் முயற்சியால் நன்கொடைகள் மூலமாக உருவாக்கப்பட்டது பாரதிதாசன் தமிழ்ப்பள்ளி. மரப்பலகைகளாலும் அத்தாப்புக் கூரையாலும் கட்டப்பட்ட பள்ளி அது.
நகரசபைத் தொழிலாளர்கள் நிறைந்திருந்த அங்கே தமிழ்ப் பள்ளி ஆசிரியரின் மகன் என்ற சிறப்பு எனக்கு தரப்பட்டது.
மாணவர்களில் சிறந்த எடுத்துக்காட்டாகவே நான் விளங்கினேன். அலேக்சாண்டிரா எஸ்ட்டேட் ஆங்கில துவக்கப் பள்ளியில் தொடர்ந்து ஆறாம் வகுப்பு வரையில் நானே முதல் மாணவனாகத் திகழ்ந்தேன். பள்ளிப் பருவத்திலேயே திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு சிந்தை மிக்க நூல்கள் நிறைய படித்தேன். அந்த வயதிலேயே சிறந்த இலட்சியம் கொண்டவனாகச் செயல்பட்டேன். அதற்குக் காரணம் நான் போற்றிய தலைவர் அறிஞர் அண்ணா!
விமானம் ஏறும் நேரம் நெருங்கிவிட்டது. என் மனத்திலோ பெரும் பூகம்பம்! அப்போது நான் ' ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ' பத்திரிகையில் மொழிபெயர்ப்பாளராகப் பணி புரிந்தேன். பாராளுமன்றத்திலும் மொழிபெயர்ப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். சிங்கப்பூர் தொலைக்காட்சியிலும் என்னைத் தேர்வுக்கு வரச் சொல்லி இருந்தனர்.
இந்த வாய்ப்புகள் அனைத்தையும் தூக்கி எறியச் செய்துவிட்டு என்னைத் தமிழகம் அனுப்புகிறார் என் தந்தை! அவர் என்னை நாடு கடத்துகிறார் என்றே சொல்லவேண்டும்!
கப்பலில் என்னை அனுப்பினால் நான் கிள்ளான் துறைமுகத்திலோ பினாங்கிலோ இறங்கி ஓடி விடுவேனாம். அதனால் கப்பல் பிரயாணத்திற்கு எடுத்த பிரயாணச் சீட்டை கடைசி நேரத்த்தில் மாற்றி என்னை " ஏர் இந்தியா " விமானத்தில் அனுப்புகிறார் அப்பா.
நான் ஊரிலிருந்து வந்து சரியாகப் பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஒரு முறை கூட திரும்பவில்லை. அங்கு சிதம்பரத்தில் என் தாத்தா, பாட்டி, அம்மா, இரு தங்கைகள் உள்ளனர். என் ஒரே அண்ணன் சென்னையில் கல்லூரியில் பயில்கின்றார். அண்ணி திருச்சியில் ஆசிரியை. இவர்களயெல்லாம் போய்ப் பார்க்க வேண்டுமாம். இல்லையேல் அவர்களை மறந்து போவேனாம்.
அதோடு நான் ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்பது அவருடைய இலட்சியமாம்! அதற்கு அங்குதான் செல்லவேண்டுமாம்!
நான் சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் நன்றாகத்தான் தெரிச்சி பெற்றிருந்தேன். நான் இங்கேயே எச்.எஸ்.சி. முடித்து மருத்துவம் பயில்வதாகக் கூறினேன். அவர் மறுத்துவிட்டார். இங்கிருந்தால் நான் பத்திரிகைத் தொழிலிலேயே இருந்து விடுவேனாம். மருத்துவம் பயில மாட்டேனாம். ஊரிலுள்ளோரை மறந்து விட்டு இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுவேனாம்!
பதட்டமும், குழப்பமும், வேதனையும் நிறைந்த நிலையில் வேண்டா வெறுப்பாக நான் சம்மதித்தேன்.
என்னை வழியனுப்ப கந்தசாமி மாமா, செல்லப்பெருமாள் மாமா, சிதம்பரம் சித்தப்பா ஆகியோருடன் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் ஜெயப்பிரகாசம், கோவிந்தசாமி, பன்னீர்செல்வம், சார்லஸ் ஆகியோர் வந்திருந்தனர்.
ஒலிபெருக்கியில் கடைசி அழைப்பு ஒலித்தது. நெஞ்சு படபடத்தது! உடல் லேசாக நடுங்கியது! சொல்ல முடியாத துயர் தொண்டையை அடைத்தது!
எல்லாரும் கை குலுக்கி என்னை வழியனுப்பினர்.
" நன்றாகப் படித்து டாக்டராகத் திரும்பி வா." என்றான் ஜெயப்பிரகாசம் மாலை நேரங்களில் என்னோடு அதிகம் கழித்தவன் . நான் நாடகத்தில் நடித்த கதாநாயகன் பாத்திரத்தில் அவன் தொடர்ந்து நடிக்க சம்மதித்திருந்தான்.
நான் பயணிகள் புறப்படும் நுழைவாயினுள் நுழைந்தபோது ஒலிபெருக்கியில் அது ஒலித்தது. என்னைத் தகவல் பிரிவுக்கு உடன் வரச் சொல்லி அறிவிக்கப்பட்டது. ஏனக்கு வியப்பையும் குழப்பத்தையும் அது உண்டு பண்ணியது. பதறியபடி அங்கு விரைந்தேன்!
எனக்கு தொலைபேசி அழைப்பு காத்திருந்தது!
" ஹலோ " என்றேன்.
" ஹலோ! நான்தான் பேசுகிறேன். பத்திரமாகச் சென்று வாருங்கள். உயிருள்ளவரை உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களைப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன் என்று தெரியலை. கட்டாயம் ஒரு டாக்டராகத் திரும்புங்கள். அங்கு சென்றதும் என்னை மறந்து விடாதீர்கள். " அந்தக் குரலில் சோகம் இழையோடியது.
அது என் லதாவின் குரல்! பத்து வருடங்கள் என்னோடு ஒன்றாக வளர்ந்து ஆளானவள்.!
" சரி லதா! நன்றி. இப்படி உன்னோடு கடைசியாகப் பேசுவேன் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. கவலைப் படாதே.! உண்மையான நம் காதலை உலகில் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது. எத்தனை ஆண்டுகளானாலும் உனக்காக நானும் காத்திருப்பேன். என் இதயத்தை இங்கு விட்டுச் செல்கிறேன்! கவலை வேண்டாம்! நாம் மீண்டும் சந்திப்போம்! "
" அத்தான்! "
" அன்பே! "
( தொடுவானம் தொடரும் )

Friday 27 June 2014

                                                          தொடுவானம்                                                    டாக்டர் ஜி. ஜான்சன்

வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும், நடக்கும் நிகழ்வுகளையும், எப்போதுமே நல்ல அனுபவமாகவே பார்ப்பவன் நான்.
அவற்றை அவ்வப்போது நாட்குறிப்பில் பதிவு செய்துவந்தேன். இந்தப் பழக்கத்தை பதிநான்கு வயதிலிருந்தே தொடங்கிவிட்டேன். நான் முழுக்க முழுக்க ஆங்கிலப் பள்ளியில் பயின்றவன். தமிழை நான் விரும்பி தமிழ் வகுப்பிலும் நூலகத்திலும் கற்றுக்கொண்டேன்.
அப்போது உயர்நிலைப் பள்ளி மாணவன். டாக்டர் மு. வா. வின் அல்லி நாவலில் அவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் பற்றி கூறியுள்ளார். நாம் முகத்தை அழகு பார்க்க கண்ணாடி உதவுவதுபோல் அகத்தை அழகு பார்க்க நாட்குறிப்பு உதவும் என்று அப்போது படித்தத்தின் விளைவே அந்த பழக்கத்தைக் கைக்கொண்டேன். அப்போது இளமைப் பருவம். அப்பாவுக்கு மட்டுமே தெரியாமல் அவற்றை ஒளித்து வைக்க நேரிட்டது. அதுபோல் இப்போதும் ஒளித்து வைத்து பெரும் இக்கட்டில் மாட்டிக்கொண்டதால் இப்போதெல்லாம் அவ்வளவு விரிவாக எழுதுவது இல்லை.
என் இள வயது நிகழ்வுகளை நான் இப்போது திரும்பிப் பார்க்க என்னுடைய ஐம்பது வருட பழமை கொண்ட அந்த நாட்குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.
அவற்றைக் கோர்வையாக சுவைபட வாசகர்களுக்குத் தருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
" தென்றலைத் தீண்டிய தில்லை! தீயைத் தாண்டியுள்ளேன்! "
என்ற கலைஞரின் பராசக்தி வசனம்போல் என்னுடைய இளமைப் பருவத்தில் நான் அடைந்த அனுபவங்கள் அனைத்துமே சோக வரலாறுதான்! அவற்றை இன்றும் பெரும் பொக்கிஷமாகவே கருதுகிறேன்.
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்புமுனைகள் கொண்டதே என்னுடைய " தொடுவானம்".
" பேனாவும் ஸ்த்டெத்தஸ்கோப்பும் " படித்து மகிழ்ந்த எனது அருமை வாசகர் நண்பர்களே, இதோ இந்த புதிய " தொடுவானம் " தொடரிலும் என்னோடு பயணம் செய்ய வாருங்கள்.
இந்த அறிய வாய்ப்பை அன்புடன் நல்கிய தினக்குரல் ஞாயிறு மலர் ஆசிரியர் திரு. இராஜசோழன் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.