Monday 10 December 2012

Christmas Short Story

கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

டாக்டர் ஜி.ஜான்சன்

அந்த முதல் வகுப்புப் பெட்டியில் நாங்கள் மூவர்தான் பிரயாணம்
செய்தோம். அவர்கள் இருவரும் என்னுடன் வேலூரில்தான் ஏறினர். அப்போது மணி
மாலை ஆறு. நாங்கள் பிரயாணம் செய்தது திருப்பதி ராமேஸ்வரம் துரித
புகைவண்டி. அப்போதெல்லாம் கரியைப் பயன்படுத்திதான் நீராவியின்
சக்தியுடன் புகைவண்டிகள் ஓடின.
வண்டிக்குள் ஏறியதுமே அவர் முதல் வேலையாக படுக்கையை காலியான
எதிர் இருக்கையில் விரித்துவிட்டார். அவருக்கு சுமார் அறுபது வயது
எனலாம். பட்டு வேஷ்டியும் ஜிப்பாவும் அணிந்திருந்தார். ஒரேயொரு
பிரயாணப்பை மட்டுமே வைத்திருந்தார். நல்ல கம்பீரமான பார்வையுடன் பணம்
படைத்த பெரும் செல்வந்தர்போல் காணப்பட்டார். பழுத்த பலாபோன்ற மா
நிறத்தில் மின்னிய அவரது தலையில் வயதுக்கேற்ற வழுக்கையும் கொஞ்சம்
நரையும் தேன்படலாயிற்று. அவருடன் வந்தவள் ஓர் இளம் பெண். வயது இருபதுகூட
இருக்காது. நிச்சயமாக அவருடைய மகள்தான் அவள். அது கொஞ்ச நேரத்தில்
உண்மையானது.
"
அப்பா. களைப்பாக இருந்தால் நீங்கள் படுங்கள். நான் ஓரமாக
உட்கார்ந்துகொள்கிறேன் " . இவ்வாறு கூறியபடி என்னையும் நோக்கினாள்.
அப்போதுதான் அவளை நேருக்கு நேர் பார்த்தேன்.
அந்த மங்கிய விளக்கொளியில் அவளின் முகம் மலர்ந்த சிவப்பு
ரோஜாவை நினைவூட்டியது. கன்னங்களோ ஆப்பிள் பழம்போல வழவழப்புடன்
பளிச்சிட்டன. சற்று ஒடிசலான உயரத்துடன் ஒய்யாரமாக பட்டுப் புடவையில் வண்ண
மயில்போல் மருண்ட மான்விழிகளுடன் என்னைப் பார்த்தாள்
"
உங்களுக்கு ஆட்சேபனை இல்லையேல் நீங்கள் இங்கே அமரலாமே? அப்பா
நன்றாக நீட்டி படுக்கலாமே? " என்றவாறு பெரியவரைப் பார்த்தேன். .
அவர் படுத்தவாறே என்னை நன்றாக ஒருமுறை மேலும் கீழும்
நோட்டமிட்டார். அதில் நியாயம் இருக்கவே செய்தது. முன்பின் தெரியாத ஒரு
இளைஞனின் அருகே இரவு பிரயாணத்தில் அருகில் அமர்வதா? யாருமே யோசிக்கதானே
செய்வார்கள்?
"
தம்பி எதுவரைக்கும்? " நல்ல தடித்த குரல் அது.
"
சிதம்பரம் வரை பெரியவரே. " இது எனது பதில். அதன் பின் எங்கள்
உரையாடல் தொடர்ந்தது. நான் சொல்லாமலேயே அவரின் மகள் என் இருக்கையின் ஒரு
ஓரத்தில் அமர்ந்துகொண்டாள். கொஞ்ச நேரத்தில் ஆனந்த விகடனில்
மூழ்கிவிட்டாள்
"
நாங்கள் விழுப்புரம் வரைதான். நள்ளிரவு ஆகிவிடும் " என்று
சொன்னவர் மகளைப்பார்த்து " அம்மா.குடிக்க கொஞ்ச தண்ணி கொடும்மா . "
என்றவாறு அவளைப் பார்த்தார்.
"
இதோ அப்பா. " என்றவள் குனிந்து பையிலிருந்து தண்ணீர் போத்தலை
எடுத்தபோது அவளின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி வெளியில்
புரண்டது.
எனக்கு அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற உற்சாகமும்
உடன் பொங்கியது!
"
நானும் கிறிஸ்தவன்தான். கிறிஸ்துமஸ் கொண்டாட ஊர் செல்கிறேன்.
நாளை காலை கிறிஸ்துமஸ் ஆராதனையில் நான்தான் நற்செய்தி கூறப்போகிறேன். "
மகிழ்ச்சியுடன் அவர்களிடம் கூறினேன். அது கேட்டு இருவருமே என்னை
வியப்புடன் பார்த்தனர்.
"
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். " என்றவாறே அவர் தண்ணீரைப்
பருகினார். மீண்டும் படுத்துக்கொண்டார். உடன் எதோ சிந்தனையிலும்
ஆழ்ந்துபோனார்.
"
நாங்கள் கிருஸ்தவர்கள் என்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?
"
ஒருவித ஆவலுடன் அவள் கேட்டாள்
"
ஆமாம் தம்பி...நான்கூட அதையேதான் யோசித்தேன் " அவரும் ஆமோதித்தார்.
"
உங்கள் கழுத்தில் தொங்கும் சிலுவை. " அவளைப்பார்த்துப்
புன்னகைத்தேன். அவளோ நாணத்துடன் தலை கவிழ்ந்தாள்.
"
உங்களுக்கு உடல் நலமில்லையா? எங்கே சென்று வருகிறீர்கள்? " வினவினேன்.
"
சி. எம். சி. மருத்துவமனை. அப்பாவுக்கு இனிப்பு நீரும்
இரத்தக் கொதிப்பும் உள்ளது. மருந்து சாப்பிடுகிறார். ஆனால் அடிக்கடி
இப்படி களைப்பு வரும். "
"
ஆமாம். இந்த இரண்டு வியாதியுமே இப்படித்தான். அதிகமான சோர்வை
உண்டுபண்ணிவிடும்."
"
நாங்கள் வந்தது அப்பாவுக்காக இல்லை. எனக்காக. "
":
உங்களுக்காகவா? ஏன்? உங்களுக்கு என்ன செய்யுது? "
"
எனக்கு ஒண்ணும் இல்லை. நான் இண்டர்வியூவுக்கு வந்தேன்."
"
ஆமாம்...இன்று பி. எஸ். சி. நர்சிங் நேர்முகத் தேர்வு
நடந்தது. எப்படி செய்தீர்கள்? இடம் கிடைத்துவிடும்தானே? "
"
தம்பி...நீங்கள் என்ன டாக்டரா? " பெரியவர் திடீர் என்று
எழுந்து உட்கார்ந்தார்.
":
இன்னும் ஆகலை. தற்போது நான்காம் ஆண்டு மருத்துவ மாணவன் "
"
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ரொம்ப சந்தோஷம் தம்பி. நான்
ஜெயசீலன். இவள் ஏன் மகள் ஸ்டெல்லா. நர்சிங் படிக்கணும் என்று பிடிவாதம்.
திருக்கோவிலூர் டேனிஷ் மிஷன் மருத்துவமனை ஸ்போன்சர் ( பரிந்துரை )
செய்துள்ளது. படித்து முடித்தபின் அங்கு பணிபுரியலாம். "
"
அப்படியானால் நிச்சயமாக இடம் கிடைத்து விடும். பெண்களுக்கு
ஏற்ற புனிதப்பணி நர்சிங். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். அதோடு
உங்கள் இருவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்."
"
ஆமாம் தம்பி... உங்களுக்கும் எங்களின் வாழ்த்துக்கள்.. உங்கள் பெயர்? "
"
அலெக்ஸ் "
"
நான் டாக்டர் தம்பி என்றே அழைக்கிறேன். விடிந்தால்
கிறிஸ்துமஸ். கடைசி நேரத்தில் ஊர் செல்கிறீர்களே? சிதம்பரத்தில் எங்கே? "
"
தெம்மூர் என்ற சிற்றூர். சிதம்பரத்தில் இருந்து பத்து
கிலோமீட்டர் தூரம். எனக்கு மாட்டு வண்டி ஸ்டேஷனில் வந்து காத்து
நிற்கும். ஒரு மணி நேரத்தில் வீடு சென்றுவிடலாம்."
கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தவர் அப்படியே கண்ணயர்ந்தார்.
ஸ்டெல்லா ஆனந்த விகடனில் மீண்டும் மூழ்கிப்போனாள்.
"
நிறைய படிப்பீர்கள் போலுள்ளதே? " அவளின் மௌன வாசிப்பு
கலைந்து என்னைக் கனிவுடன் பார்த்தாள்.
"
ஆமாம்... படிப்பதுதான் என் பொழுதுபோக்கு., அப்பா நிறைய
புத்தகங்கள் வாங்குவார் ".
"
நாவல்கள் படிக்கும் பழக்கம்? "
":
நிறைய படிப்பேன். "
"
உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்? "
"
கல்கியும் அகிலனும். ஜெயகாந்தனையும் பிடிக்கும். "
"
அப்போ பாவை விளக்கு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்
எல்லாம் படித்திருப்பீர்கள்? "
"
ஆமாம். தணிகாசலம், சிவகாமி, ராஜேந்திர சோழர், வத்தியத்தேவன்
ஆகியோர் மறக்கக் கூடிய பத்திரங்களா? "
"
உண்மைதான். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். தமிழ் இலக்கியம்
உள்ளவரை இவர்களும் உயர் வாழ்வர்! இதுதான் படைபாளர்களின் தனிச் சிறப்பு! "
"
உங்களுக்கு அதிக தமிழ் ஆர்வம் போலுள்ளதே? "
"
எதை வைத்து எடை போட்டீர்கள்? "
"
உங்களின் பேச்சில்தான் தமிழ் மணம் வீசுதே? "
என் உடலும் உள்ளமும் சிலிர்த்தது! ஆகா! இங்கே பார்பதற்கும்,
இனிமையாக பேசுவதற்கும் ஓர் அழகிய தமிழ்ப் பெண் உள்ளாள் என்று உவகை
கொண்டேன்!
எங்களின் இலக்கிய உரையாடல் அந்த இரவில் இதமாகவே இருந்தது.
புகை வண்டியோ பெரும் இரைச்சலுடன் நெருப்பும் கரியும் கலந்த
புகையைக் கக்கிக்கொண்டு காரிருளைக் கிழித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.
கண்ணமங்கலம், திருக்கோவிலூர் ஆகிய ஊர்களில் சிறிது நேரம்
நின்று மீண்டும் தன்னுடைய பிரயாணத்தை திருவண்ணாமலை நோக்கித் தொடர்ந்தது.
திருவண்ணமலையில் நான் இறங்கி தேநீர் அருந்திவிட்டு அவளுக்கும்
வாங்கி தந்தேன். பெரியவர் நல்ல தூக்கத்தில் இருந்தார். அவரை நாங்கள்
எழுப்பவில்லை.
இன்னும் ஒரு மணி நேரத்தில் விழுப்புரம் சென்றடையும். அங்கே
இவர்கள் இறங்கிவிடுவார்கள். ஏனோ மனதில் ஒருவித ஏக்கம் தோன்றலாயிற்று.
இதுபோன்ற இரயில் பிரயாணங்களில் எத்தனையோ பேர்களுடன் பேசியுள்ளேன். அவை
அனைத்தும் அந்த பிரயாணத்துடன் முடிந்துவிடும். ஆனால் இது என்ன விந்தை?
ஒரு சில மணி நேரத்தில் இந்த ஸ்டெல்லா மீது எனக்கு இந்த ஈர்ப்பு உண்டானதே?
இது என்னவாக இருக்கும்? கொஞ்ச நேரம் நிலை தடுமாறிய நிலையில் கண்களை சற்றே
மூடினேன். அப்படியே தூங்கியும்போனேன்.
அன்றைய பகல் முழுவதும் ஆபரேஷன் தியேட்டரில் கடுமையான வேலை.
கால் கடுக்க நின்றபடி சர்ஜன் பூஷணம் அவர்களுக்கு தொடர்ந்து
உதவவேண்டியிருந்தது. அதனால் அயர்ந்துபோய்விட்டேன்
"
சார்...சார்...! " என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன்.
ஸ்டெல்லா விழிகளில் பீதியுடன், " appavaip பாருங்கள் சார் ! "
என்று படபடத்தாள்.
பெரியவர் எதிரே பேயறைந்தவர்போல் வீற்றிருந்தார். அவருக்கு
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது!
"
என்ன ஆச்சு உங்களுக்கு? " பதற்றத்துடன் அவரின் நாடியைப்
பிடித்து பார்த்தேன். நிமிடத்திற்கு நூறு காட்டியது.
உடன் வேகத்துடன் செயல்பட்டேன். எனது பெட்டியில் இருந்து
ஸ்டெதஸ்கோப்பை வெளியில் எடுத்து அவரை பரிசோதித்தேன். இதயத் துடிப்பு
இரயில் இஞ்சின் போல் வேகமாகவும் இடையிடையே சில மாற்றங்களும் தென்பட்டது.
அவருக்கு வியர்த்தும் ஊற்றியது.
"
மூச்சு முட்டுது...நெஞ்சு வலிக்குது ". சிரமத்துடன் அவர் கூறினார்.
நான் ஊருக்கு செல்லும்போதெல்லாம் அவசர
சிகிச்சைக்குத் தேவையான கருவிக்கும் சில மருந்துகளும் கொண்டுசெல்வது
வழக்கம். பல வேளைகளில் அவை உதவின. அந்த பையில் இருந்து இரத்த அழுத்தம்
பார்க்கும் கருவியை எடுத்து அவரைப் பரிசோதித்தேன். அது நூறு / எழுபது
என்று குறைவாகக் காட்டியது. குளுகொமீட்டர் கருவியால் அவரின் இனிப்பின்
அளவைப் பார்த்தேன். இனிப்பின் அளவு மூன்றுதான் இருந்தது. அது மிகவும்
குறைவான ஹைப்போ நிலை.
அவருக்கு இப்போது குறைவான இனிப்புடன் லேசான மாரடைப்பு என்பதை
தெரிந்துகொண்டேன்.
உடன் ஒரு மருத்துவமனை கொண்டு செல்வதே உகந்தது. ஆனால் அது
எப்படி சாத்தியமாகும்? ஓடும் இரயிலில் அல்லவா நாங்கள் உள்ளோம்?
விழுப்புரம் சென்றடைய இன்னும் அரை மணி நேரம் ஆகும். அதுவரை அவரை நான்
காப்பாற்றியே ஆக வேண்டும்.
"
ஸ்டெல்லா...உன்னிடம் இனிப்பான பானம் ஏதும் உள்ளதா? " அவள்
நடுங்கிய நிலையில் அழுதுகொண்டிருந்தாள்.
பையிலிருந்து இனிப்புப் பொட்டலம் எடுத்துத் தந்தாள். அதை
அவரிடம் தந்து உண்ணச் சொன்னேன். குறைந்துபோன இனிப்புக்கு அதுவே
மாமருந்து. என் கைவசம் இருந்த ஜி. டி. என். மாத்திரை ஒன்றை விழுங்கச்
சொன்னேன். அத்துடன் ஒரு ஆஸ்பிரின் மாத்திரையும் தந்தேன். இவை மாரடைப்பை
தற்காலிகமாக சரிசெய்யும்.
"
அழாதே ஸ்டெல்லா ..." அன்புடன் அவளின் தோளைத் தட்டி ஆறுதல் சொன்னேன்.
"
அப்பாவுக்கு என்ன ஆச்சு? எனக்கு பயமா உள்ளது. " அவளின் அழுகை
நின்றபாடில்லை.
"
எல்லாம் சரியாகிவிடும். பயப்படாதே. நான் இருக்கிறேன் அல்லவா?
"
தந்தையின் அருகில் அமர்ந்து அவரின் கரத்தைப் பற்றிகொண்டிருந்தவளை
நோக்கிக் கூறினேன்.
அவரை மீண்டும் பரிசோதனை செய்தேன். இதயத் துடிப்பு சீரானது
தெரிந்தது. மூச்சுத் திணறலும் கொஞ்சம் குறைந்திருந்தது.
"
இப்போ எப்படி உள்ளது? வலி குறைந்துள்ளதா? " என்னையே
பார்த்துக்கொண்டிருந்த அவரிடம் கேட்டேன்.
"
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தம்பி. நல்ல சமாரியன் போல வந்து
காப்பாற்றினீர்கள். " திணறியவாறு கூறினார்.
"
வலி குறைந்துள்ளதா? " மீண்டும் கேட்டேன்.
"
கொஞ்சம் குறைந்துள்ளது..ஆனால் இன்னும் வலிக்குது..."
நெஞ்சைப் பிடித்தவாறு கூறினார்.
"
அதற்கான மருந்துகள் தந்துள்ளேன். தைரியமாக இருங்கள். எதையும்
யோசித்து குழம்பிப்போகவேண்டாம். " ஆறுதல் சொன்னபடி கைக்கடிகாரத்தைப்
பார்த்தேன். இரவு மணி பதினொன்று ஐம்பது. இன்னும் பத்து நிமிடத்தில்
விழுப்புரம் வந்துவிடும். அவரை எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்னும்
தைரியத்துடன் பிரயாணப் பைக்குள் கருவிகளை வைத்து மூடினேன். உடன் அவருக்கு
ஆக்சிஜன் தந்தால் காப்பாற்றிவிடலாம் . வலி உள்ளவரை உயிருக்கு ஆபத்து
உள்ளது என்பது எனக்குத் தெரியும். அதை நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
விழுப்புரம் சந்திப்பில் சுமார் அரைமணி நேரமாவது புகைவண்டி நிற்கும்.
நான் இறங்கியதும் முதல் வேலையாக ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு ஓடி
அவரின் உதவியை நாடினேன்.
அங்கிருந்து உடன் சக்கர நாற்காலி கொண்டுவரப்பட்டது. அருகிலேயே செந்தில்
நர்சிங் ஹோம் உள்ளதென்று அறிந்துகொண்டேன்.
அவர்களுடன் நானும் இறங்கிவிட்டேன். இந்த நிலையில் அவர்களை
தனியே விட்டுவிட்டு நான் எப்படி பிரயாணத்தைத் தொடர முடியும்?
வாடகை ஊர்தியில் சென்றடைந்தோம். உடன் அவருக்கு ஆக்சிஜன்
தரப்பட்டது. .சி .ஜி. எடுத்துப்பார்த்ததில் லேசான மாரடைப்பின் அறிகுறி
தென்பட்டது. குளுக்கொமீட்டர் பரிசோதனையில் இனிப்பு கட்டுப்பாட்டுக்குள்
இருந்தது. தொலைபேசிமூலம் அவரின் மனைவிக்கு தகவல் கூறினோம். பத்து
நிமிடத்தில் அவரும் வந்துவிட்டார். அவர்களிடம் சொந்தமான அம்பாசடர் கார்
இருந்தது. டாக்டர் செந்தில் என்னுடைய முதல் உதவி மிகவும் பயன் தந்துள்ளது
என்று அவரிடம் கூறினார்.
அவர் என்னை நன்றியுடன் பார்த்து, " தம்பி...இனிமேல் நீங்கள்
எப்படி ஊருக்கு போவீர்கள்? இதற்குமேல் இரயில் கிடையாதே? " என்று
கவலையுடன் கேட்டார்.
அவர் கூறியது உண்மைதான். இனி விடிந்தால்தான் வண்டி கிடைக்கும்.
அப்படி சென்றால் காலையில் கிறிஸ்துமஸ் ஆராதனையில் நான் கலந்துகொள்ள
முடியாது.
இனிமேல் செய்தி அனுப்பவும் முடியாது. அங்கு தொலைப்பேசி
வசதியும் கிடையாது. பாவம் சபை மக்கள். என் வரவை நம்பி ஏமாந்துபோவார்கள்.
எனக்கும் அது பெருத்த ஏமாற்றமே! மிகுந்த ஆர்வத்துடன் ஏசுவின் பிறப்பை
நற்செய்தியாக கூற லூக்கா இரண்டாம் அதிகாரத்திலிருந்து குறிப்புகள்
எடுத்து வந்துள்ளேன்.
"
இதோ. எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும்
நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் ". என்று தேவதூதன் அந்த எளிமையான
மெய்ப்பர்களிடம் சொன்னது மிகவும் அர்த்தமுள்ளது. அதை வைத்து ஒரு நல்ல
செய்தி கொடுக்க தயார் செய்துள்ளேன். காரணம் கிறிஸ்துமஸ் தினத்தில்
எங்கள் ஊரின் எல்லா மக்களும் ஆலயத்தில் வழிபட வந்துவிடுவார்கள்.
இந்துக்களும் கிறிஸ்தவர்களும் சமமாக வாழும் கிராமம் தெம்மூர். அங்குள்ள
பிள்ளைகள் அனைவருமே ஆலயத்தின் பள்ளியில்தான் பயில்கின்றனர். பல
அற்புதங்கள் நடந்துள்ள எங்கள் ஆலயத்தின் பெயர்கூட அற்புதநாதர் ஆலயம்!
என்னுடைய மௌனத்தை மீண்டும் கலைத்தார் பெரியவர்.
"
தம்பி.என்ன யோசனை? ஊருக்கு எப்படிப் போவது என்றா? கவலை
வேண்டாம் . நான் அனுப்பிவைக்கிறேன். " என்றவாறு அங்கே நின்றுகொண்டிருந்த
அவருடைய கார் டிரைவரைப் பார்த்தார்.
நான் விடை பெற்றபோது டாக்டர் செந்தில் என் கையைப் பிடித்துக்
குலுக்கி, " வெல் டன் யங் மேன் " என்று பாராட்டினார்.
ஸ்டெல்லா கண் கலங்கிய நிலையில் இரு கரம்கூப்பி விடைதந்தாள்.
அறையை விட்டு டிரைவருடன் வெளியேறும் நேரத்தில் மீண்டும் அவரின்
குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
"
தம்பி. இதோடு நமது உறவு முடிந்துவிடாது. கிறிஸ்துமஸ்
முடிந்ததும் மீண்டும் கார் அனுப்புவேன். கட்டாயம் எங்கள் வீட்டுக்கு
வரவேண்டும். அதோடு ஸ்டெல்லாவுக்கு இடம் கிடைத்துவிட்டால் உங்களோடுதான்
அனுப்பிவைப்பேன். "
அது கேட்ட எனக்கு இன்ப அதிர்ச்சி! அந்த இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறிவிட்டு விடைபெற்றேன் .




No comments:

Post a Comment