Saturday 28 June 2014

Thoduvaanam Part 3.

                                                               தொடுவானம்

                                                              டாக்டர் ஜி. ஜான்சன்

3. விலகி ஓடிய வசந்தம்.

அப்பா சொன்னது தீர்க்கதரிசனமானது!
அவர் அவ்வாறு சொன்ன மறு வாரத்தில் லதா வயதுக்கு வந்து விட்டாள்!
நான் சொல்லாமலேயே என்னுடைய அறைக்கு வருவதை அவள் நிறுத்திக் கொண்டாள்
அவளுக்கு எதேதோ சடங்குகள் செய்தனர்.
பள்ளிக்குக் கூட சில நாட்கள் அவள் வரவில்லை. நாங்கள் அலெக்சாண்ட்ரா எஸ்டேட் துவக்கப் பள்ளியில் ஒன்றாகவே நடந்து சென்று வருவோம். சுமார் மூன்று கிலோமீட்டர் அவ்வாறு நடந்து செல்ல வேண்டும். நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் பயின்றாலும் வெவ்வேறு வகுப்புகளில் இருந்தோம்.
நான் அவளின் வீடு சென்று பார்த்தபோது அவள் முகத்தில் ஒரு மாற்றம் கண்டேன். புதுப் பொலிவு போன்றிருந்தது.
அவள் முன்புபோல் என்னிடம் கலகலவென்று பேசவில்லை. என்ன பேசுவது என்று தடுமாறுவது தெரிந்தது.
" நோக்கினால் நோக்கி இறைஞ்சினாள் அக்தவள்
யாப்பினுள் அட்டிய நீர். " என்று நான் காமத்துப்பாலில் படித்துள்ளேன். அப்போது அது எனக்குப் புரியவில்லை.
ஆனால் இப்போதோ அதன் அர்த்தம் புரிந்தது. நாணம் என்பது யாது என நான் அவள் முகத்தில் கண்டு வியந்தேன்.
நாணி கோணியபடியே, " நான் வயசுக்கு வந்துட்டேன்டா! " என்று என்னிடம் கூறினாள்.
" அப்பா கூட அப்படித்தான் போன வாரமே சொன்னார். ஆமாம். வயதுக்கு வந்துவிட்டால் என்னவாகும்? "
அதுபற்றி எனக்கு ஏதும் தெரியாது.
" ஊகூம்... நான் சொல்ல மாட்டேன்டா. " என்று சொன்னவள் அறைக்குள் ஓடிவிட்டாள்.
அப்போது நாங்கள் ஆறாம் வகுப்பில் இருந்தோம். எங்கள் இருவருக்கும் வயது பன்னிரெண்டு.
பெண்களுக்கு நாணம் வரும் என்பதை நான் குறளில் படித்துள்ளேன். தமிழர் திருநாளில் திருக்குறள் மனனப் போட்டி நடந்தது. அதில் நான் பங்கு பெற்று பரிசு வென்றேன்,. அப்போது மொத்தம் நானூறு குரள்களை வரிசைப்படி மனப்பாடம் செய்திருந்தேன். அவற்றில் காமத்த்துப்பாலும் அடங்கும்.
காமத்துப்பாலில் காதல் பற்றி படித்தபோது எனக்கு சரிவர புரியவில்லை.
ஆனால் வயதுக்கு வந்துவிட்ட லதாவிடம் நான் கண்ட மாற்றங்கள் ஓரளவு காதல் பற்றி தெரியவைத்தது.
அதன்பின்பு நாங்கள் வேறு விதத்தில் பழகினோம். எங்களுக்குள் ஒருவித ஈர்ப்பு உண்டானதை உணர்ந்தோம்.
தந்தை தடை செய்திருந்த போதிலும் அவர் இல்லாத போது அவள் வந்து போய்க் கொண்டுதானிருந்தாள். அநேகமாக அது அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் நேரடியாக அதுபற்றி கேட்கவில்லை.
ஆனால் மாலையில் வேலை முடிந்து வந்ததும் முதல் கேள்வியாக, " லதா வந்தாளா? " என்பது வழக்கமானது.
நான் எப்போதும், ' இல்லை " என்றுதான் கூறுவேன். " ஆமாம் வந்தாள் " என்று உண்மையைச் சொன்னால் அவர் கோபங்கொள்வார் என்பது எனக்குத் தெரியாதா என்ன? அவர் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை.
இரண்டு வாரங்கள்தான் அவ்வாறு ஓடின.
ஒரு நாள் எங்கள் வீட்டு முன் ஒரு லாரி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய இரு சீனர்கள் ' கிடு கிடு ' வென்று எங்கள் அறைக்குள் இருந்த அத்தனை சாமான்களையும் லாரிக்குள் ஏற்றிவிட்டனர்! நான் ' திரு திரு ' வென விழித்து நின்றேன்.
அப்பாவைப் பார்த்து, " எங்கே போகிறோம்? " என்று சற்று கோபமாகவே கேட்டேன்.
" வேறு வீட்டுக்குப் போகிறோம். " என்று மட்டும் கூறிவிட்டு, சாமான்களைச் சரி பார்ப்பதில் கவனம் செலுத்தினார்.
எனக்கு துக்கம் நெஞ்சில் முட்டியது. கண்கள் கலங்கின. ஆறு வருடங்கள் வாழ்ந்த இடம்! விட்டுப் பிரிய மனமில்லை!
அதைவிட ... அதைவிட.... என் லதாவை இனிமேல் தினமும் பார்க்க முடியாதா? ஐயோ! அதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!
இது சற்றும் எதிர்ப்பார்க்காத அதிர்ச்சி! இப்படி ஆகும் என்று நாங்கள் எண்ணிப்ப்பார்க்கவில்லை!
லாரி கிளம்பியபோது லதா அங்கு வந்து சோகத்துடன் கையசைத்து விடை தந்தாள்! அப்போது அவள் திக்கற்ற ஆனாதைப்போல் காணப்பட்டாள்! சிறகொடிந்த பறவைப்போலானாள்! என் நிலையோ எல்லாவற்றையும் இழந்து போனது போலிருந்தது! துக்கத்தால் நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது!
புது வீட்டின் முன் லாரி நின்றது. அங்கிருந்து வெகு தூரம் இல்லாதது கொஞ்சம் ஆறுதல் அளித்தது. நாங்கள் இருந்தது மலையின் உச்சியில். இப்போது மலையின் அடிவாரத்தில் கம்பத்தில் அந்த பலகை வீடு இருந்தது. தகரக் கூரை போடப்பட்டிருந்தது. வெயில் காலங்களில் நிச்சயம் சூடு அதிகம் இருக்கும். ஒரே அறை என்றபோதிலும், சமைக்க வெளியில் தனியறை இருந்தது. இருந்து என்ன பயன்? லதா இல்லாமல் தனியாக அரிசியில் கல் பொறுக்கி சமைக்க வேண்டுமே! நடக்கும் தூரத்தில் தண்ணீர்க் குழாய் இருந்தது.வாளியில் தண்ணீர் கொண்டுவரலாம்.
கூளிப்பதுதான் சிரமம் .துணிகளைத் துவைப்பது அதைவிட சிரமம். வாளியில் அவற்றை எடுத்துக்கொண்டு நகரசபை வீடுகள் பக்கம் செல்ல வேண்டும். அங்குள்ள பொதுவான கழிவறைகளையும், குளியல் அறைகளையும் பயன்படுத்த வேண்டும்.
நான் அங்கு சென்ற பார்த்தபோது அது ப்ளாக் பதின்மூன்றில் இருந்தது. நல்ல வேளையாக தான் நா. கோவிந்தசாமி குடியிருந்தான். அவனும் தன்னுடைய அப்பாவுடன்தான் இருந்தான்.
அவன் நிலை இன்னும் பரிதாபமானது. சிறு வயதிலேயே தாயை இழந்தவன். தந்தை நகரசபைத் தொழிலாளிதான். தந்தை பெரியார் மீது அதிகமான பற்று கொண்டவர். கோவிந்தசாமியும் என்னுடைய பள்ளியில் பயின்றவன். கொஞ்ச நாட்கள் அக்காளுடன் தமிழகம் சென்றவன் மீண்டும் திரும்பியிருந்தான்.அங்கு அவன் குடியிருந்தது சற்று ஆறுதல் தந்தது.
ஆனால் லதாவை தினமும் எப்படிப் பார்த்து பேசுவது என்ற தவிப்பே மேலோங்கியது. அப்படி என்ன அவளுடன் பேசவேண்டும் என்பது தெரியாமலேயே, எப்படியாவது பார்த்தாலே போதும் என்ற நிலையும் உண்டானது!
துன்பம் வந்தால் தொடர்ந்து வரும் என்பார்கள். " பட்ட காலிலே படும்; கெட்டக் குடியே கெடும் " என்பது பழமொழி.
அந்த நேரம் பார்த்து துவக்கப் பள்ளியின் இறுதித் தேர்வு வந்தது. அந்த ஆறாம் வகுப்புத் தேர்வு அப்போது அதி முக்கியமானது. அதில் தேர்ச்சி பெற்றால்தான் மேற்கொண்டு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல முடியும். அதிலும் நான் வகுப்பில் முதல் மாணவன் என்பதால் அது போன்று முதல் நிலையில் தேறினால்தான் சிங்கப்பூரின் சிறந்த முதல் நாற்பது மாணவர்களுள் ஒருவனாக வர முடியும். அப்படி வந்தால்தான் சிங்கப்பூரின் சிறந்த முதல் உயர் நிலைப்பள்ளியான ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் அரசாங்கமே தேர்ந்தெடுத்து சேர்த்துக்கொள்ளும்.
நான் நன்றாக தேர்ச்சி பெறுவேன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. இந்த ஆறு வருடங்களில் நான்தான் வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்துள்ளேன். என் வகுப்புகளில் என்னைத் தவிர மற்ற அனைவருமே சீன இனத்தவர்.
முதல் வகுப்பிலேயே எனக்கு பயம் உண்டானது. எல்லா பிள்ளைகளும் சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். நான் தமிழகத்திலிருந்து வந்திருந்ததால் ஆங்கிலம் தெரியாமல் விழித்தேன்... தடுமாறினேன்!
ஆனால் காலாண்டுத் தேர்வில் ஒரு வினோதம் நடந்தது. என்னால் அதை நம்பமுடியவில்லை. வகுப்பில் நான்தான் முதல் மாணவன்!
வகுப்பு ஆசிரியை திருமதி டான், தலைமை ஆசிரியை திருமதி ஐசக் உட்பட அனைவரும் வியந்துபோயினர். அப்பாவுக்கோ பெருமிதம். அவரது சக ஆசிரியர்களிடம் சொல்லி மகிழ்ந்தார். லதா வீடு சென்று பெருமையாகப் பேசினார்.
தமிழ் நாட்டிலிருந்து வந்தவன், ஆங்கிலப் பள்ளியில் எவ்வாறு முதல் மாணவாக தேர்ச்சி பெற்றென் என்பதே அனைவரின் வியப்பாகும். அந்த வியப்பே எனக்குப் பெரும் ஊக்குவிப்பானது!
முதல் மாணவன் என்ற சிறப்பை எப்படியாவது இனிமேல் தக்க வைத்துக் கொள்ள உறுதி பூண்டேன்.
வகுப்பில் ஆசிரியை நடத்திய பாடங்களை வீடு திரும்பியதும் உடன் ஒருமுறை படித்து விடுவேன். மறு நாள் நடக்கவிருக்கும் பாடங்களையும் ஒரு முறை படித்து முடிப்பேன். அதனால் அடுத்த ஆசிரியை பாடம் நடத்துவது எளிதில் புரியும். இதையே நான் படிக்கும் பாணியாக பின்பற்றினேன்.முதல்
எந்நேரமும் படிப்பதிலும், எழுதுவதிலும் கவனம் செலுத்தினேன்.
அடுத்தடுத்த தேர்வுகளிலும் எல்லா பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று தொடர்ந்து வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்தேன். படிப்பைத் தவிர என் கவனம் வேறு எதிலும் செல்லவில்லை.
எப்போதும் கையில் புத்தகம் இருப்பதைப் பார்த்து அப்பா வியந்துபோனார்.
சாப்பிடக் கூப்பிடுவார். நான் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பேன்.
" சாப்பிட வாடா. " என்று சொல்லி அடிப்பார்.
" சாப்பிடும் நேரத்திலுமா உனக்கு படிப்பு? " என்றும் திட்டுவார்.
தொடர்ந்து வகுப்பில் மட்டுமல்லாது, எல்லா வகுப்புகளுக்கும் நானே முதல் மாணவனாகத் தேறினேன். பல பரிசுகள் பெற்றென். அவ்வாறு ஆறாம் வகுப்பு வரை நானே தலைசிறந்த மாணவனாகத் திகழ்ந்தேன்!
தேர்வு நேரத்தில் இப்படி அப்பா வீடு மாற்றிவிட்டாரே! லதாவைப் பிரிந்து மனம் குழம்புகிறதே! இது படிப்பை அல்லவா பாதிக்கும்!
தேர்வுகள் ஒரு வாரம் நடந்தன. அந்த ஒரு வாரமும் தினமும் அவளை பள்ளியில் பார்த்தேன்.
பழையபடி எங்களால் உற்சாகமாகப் பேச முடியவில்லை. இருவரின் முகத்திலும் சோகம்.
மலையிலிருந்து அவள் இறங்கி வரும்வரைக் காத்திருப்பேன். பள்ளி வரை பேசிக்கொண்டே செல்வோம். அதுபோன்று பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது மலை அடிவாரத்தில் விடை பெறுவோம்.
தேர்வுகள் முடிந்தன. அதைத் தொடர்ந்து நீண்ட விடுமுறை. அப்பாவுக்கும் பள்ளி விடுமுறை. நான் சிறை கைதியானேன்! லதாவைப் பார்க்க முடியாமல் தவித்தேன்!
தொடுவானம் தொடரும்.....

No comments:

Post a Comment