Thursday 21 February 2013

கற்பனைக் கால் வலி

டாக்டர். ஜி. ஜான்சன்
அன்று நான் உலு திராம் லண்டன் கிளினிக்கில் பகுதி நேர வேலைக்கு
சென்றிருந்தேன். அதன் உரிமையாளர் டாக்டர் நித்தியானந்தா தலைநகரில்
நடைபெறும் மருத்துவ மாநாட்டுக்கு சென்றிருந்தார்.
எனக்கு அந்த கிளினிக் பிடித்திருந்தது. உலு திராம் பேருந்து
நிலையத்தின் எதிரே அமைந்த கடைகளின் வரிசையில் அது அமைத்திருந்தது. அந்த
சிறு டவுனின் மையப்பகுதியும் அதுவே எனலாம். அங்கு நிறைய தொழிற்சாலைகள்
இருந்ததால் வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிந்தனர். அவர்களின் வங்காள
தேசிகள்தான் அதிகமானோர். டாக்டர் நித்தியானந்தா டாக்காவில் மருத்துவம்
பயின்றவர். அதனால் அவர் ஹிந்தியும் உருது மொழியும் சரளமாக பேசுவார்.
இதனால் பல தொழிற்ச்சாலைகளுக்கு இவர் பகுதி நேர டாக்டராகவும் செயல்
பட்டார்.
கிளினிக் கச்சிதமாக வடிவமைக்கப்படிருன்தது .. அதில் பணிபுரிந்த
மூவரும் தமிழ்ப் பெண்கள்
எனக்கு உதவியவள் கமலா. மா நிறத்தில் ஒடிசலான உருவமுடையவள்.
தமிழ், ஆங்கிலம், மலாய் மொழிகளில் சரளமாக பேசுபவள். பம்பரமாக சுழன்று
பல்வேறு வகைகளில் எனக்கு உதவினாள்.
நோயாளிகளைப் பதியும் பகுதியில் லதா அமர்ந்திருந்தாள். அவள்
நல்ல நிறத்தில் மொழுமொழுவென்று பேசும் பொம்மையை நினைவூட்டினாள்.
நோயாளிகள் வருவதும் போவதுமாக இருந்தனர். மாலையில்தான் சற்று
ஓய்வாக இருந்தது.
அப்போது கமலா என்னை சிகிச்சை அறைக்கு அழைத்தாள். அங்கே ஒரு
விசித்திரம் காத்துள்ளதாகவும் கூறினாள். நான் அவளைப் பின்தொடர்ந்தேன்.
சக்கர வண்டியில் ஒரு மலாய் மூதாட்டி அமர்ந்திருந்தார். பாஜு
கூரோங் எனும் மலாய் உடை அணிந்திருந்தார்.
" அம்மா, உங்களுக்கு என்ன செய்கிறது? " என்று மலாய் மொழியில் கேட்டேன்.
என்னை ஏறெடுத்துப் பார்த்த அவர், " கடுமையான கால் வலி டாக்டர் " என்றார்.
" எந்த காலில் எத்தனை நாளா வலிக்குது ? " என்று கேட்டேன்.
" இதே காலில் ஆறு மாதமா வலிக்குது டாக்டர் . " என்று
சொல்லியவாறே கால்களை மறைத்திருந்த ஆடையைத் தூக்கினார்.
அவருக்கு ஒரு கால்தான் இருந்தது. இடது காலைக் காணவில்லை.அது
முழங்காலுக்குமேல் துண்டிக்கப்பட்டு தொங்கியது.
" உங்களுக்கு இனிப்பு நீர் வியாதியா? "
" ஆமாம் டாக்டர். காலை எடுத்து ஒரு வருஷமாவுது. ஆனா இன்னும்
வலிக்குது." என்று சொன்னவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்.
" அதான் கால் இல்லையே? பின்பு எங்கே வலிக்குது அம்மா? "
" அந்த கால் இன்னும் இருப்பதுபோல் அங்கேதான் வலிக்குது. நான்
உண்மையை சொன்னால் யாரும் நம்பமாட்டேன் என்கிறார்கள்." என்று கூறியவாறு
அவரைக் கூட்டி வந்துள்ள மகளைப் பார்த்தார்.
" சரியம்மா. நீங்கள் சொல்வது எனக்குப் புரியுது. இதை சரி
செய்துவிடலாம் கவலை வேண்டாம்." அவருக்கு ஆறுதல் கூறினேன்.
என் அருகே நின்ற கமலா ஒன்றும் புரியாமல் என்னைப் பார்த்து
விழித்தாள். அதில் லேசான குறும்பு சிரிப்பும் இழையோடியது.
நான் கமலாவுடன் என் அறைக்கு திரும்பினேன்.
" என்னங்க டாக்டர் இது? இல்லாத கால் இன்னும் வலிக்குது
என்கிறாரே? " கமலாவின் குழப்பம் இன்னும் தீரவில்லை.
" அவர் கூறுவது உண்மைதான் கமலா.இதை கற்பனை கால் வலி என்று
கூறலாம்.அவருடைய கால் துண்டிக்கபட்டபோது நரம்புகள் மூளைக்கு தவறான செய்தி
அனுப்பி அந்த கால் இன்னும் இருப்பதாகவே உணர்த்தியதால், அதுவே உண்மை என்று
மூளை நம்பி வலி உணர்வை இன்னும் தந்து கொண்டிருகிறது. " நான்
விளக்கினேன்.
இது கேட்டு வியந்துபோன கமலா, " இதை எப்படி குணப்படுத்துவது
டாக்டர்? " எனக் கேட்டாள்.
" வேறு வழியில்லை. வலி குறைக்கும் மாத்திரைகள் தரலாம்.
அத்துடன் துண்டிக்கப்பட்டுள்ள பகுதியின் நரம்புகளுக்கு மசாஜ் போன்ற
பயிற்சியும் தரலாம். மருத்துவக் கலையில் இதுபோன்ற வினோதமான நிகழ்வுகளும்
இருக்கவே செய்கின்றன!"
நான் சொன்னதைப் புரிந்துகொன்டவள்போல் தலையை ஆட்டினாள் கமலா.

Reply
Forward

No comments:

Post a Comment