Thursday, 21 February 2013

சிறுகதை ஓடிப்போனவன்
டாக்டர் ஜி. ஜான்சன்

நள்ளிரவைத் தாண்டி ஒரு மணி இருக்கலாம். அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த என்னை தேவகி எழுப்பினாள்.
கண்விழித்தேன். அணைந்திருந்த மின்சார விளக்கு மீண்டும் உயிர் பெற்றிருந்தது . கூசிய கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்து அவளைப் பார்த்தேன்.
" என்ன தேவகி? பேஷண்ட்டா? "
" ஆமாம் டாக்டர்...ஒரு எமெர்ஜென்சி. முதுகில் பெரிய கட்டு. தையல் போடணும் போல இருக்கு.. போலீஸ் கேசா என்று தெரியல. தமிழ பையன்கள்தான். " வெளியில் சத்தம் கேட்காதவாறு மெல்லியக் குரலில் கூறினாள் .
முகம் கழுவி துடைத்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்தேன்.
மூன்று தமிழ் இளைஞர்கள் நுழைந்தனர்.
கட்டு போட்டுள்ள இளைஞனைக் கைத்தாங்கலாக மற்ற இருவரும் அணைத்து வந்தனர்.
நேராக சிகிச்சை அறைக்குள் கொண்டுபோகச் சொல்லிவிட்டு பின்தொடர்ந்தேன்.
தேவகி கட்டுகளை அவிழ்த்துக்கொண்டிருந்தாள் . நான் கைகளில் உறைகள் மாட்டிக்கொண்டு அவர்களை விசாரித்தேன்.
" என்ன ஆச்சு? உண்மையைச் சொல்லுங்கள்." அவர்களைப் பார்த்துக் கூறினேன்
" டாக்டர், எங்கள் மேல் எந்த தப்பும் இல்லை. நாங்கள் டீ கடையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். யாரோ இரண்டு பேர் பைக்கில் வந்து இறங்கி இவனை பாராங்கத்தியால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். சாலா ஓராங் போலே தெரியுது.. "
" போலீசில் ரிப்போர்ட் செய்தீர்களா? "
" இல்லைங்க டாக்டர். அங்கே போனா பெரிய பேஜார். நாங்கள் எந்த அடையாளமும் காட்டமுடியாது. எங்களையும் பிடிச்சி உள்ளே வச்சுடுவான். " இருவரில் ஒருவன் விளக்கினான்.
" இவனை எப்படியாவது காப்பாத்த வேண்டும். அதனால்தான் உங்களிடம் வந்துருக்கோம் . பணம் பத்தி கவலை வேண்டாம். " இது அடுத்தவனின் மன்றாட்டு .
இந்த அகால நேரத்தில் என் இவர்கள் டீ கடைக்குப் போகணும்? வீட்டில் யாரும் இது பற்றி கேட்பதில்லையா? உள்ளுக்குள் இதுபோன்ற கோபம் இருந்தாலும் வெட்டுப்பட்டு கிடப்பவன் மீது அனுதாபமே உண்டானது.
காயத்தைப் பார்த்தேன். முதுகின் பாதியில் நேர்கீழாக நீண்ட வெட்டு அது. சுமார் இருபது சென்ட்டிமீட்டர் நீளம். மூன்று சென்டிமீட்டர் ஆழம் எனலாம். இருபதுக்கும் குறையாத தையல் தேவைப்படும்.. இதில் தோலைமட்டும் ஒன்றுசேர்த்து தைத்துவிட முடியாது. உள்ளே வெட்டுபட்டுள்ள இரத்தக் குழாய்களை கட்டியாக வேண்டும். அப்போதுதான் அவற்றிலிருந்து பீச்சிட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் இரத்தம் நிற்கும். அதன்பிறகு பிளவுபட்டுள்ள தசைகளை ஒன்றாக இணைத்துத் தைக்க வேண்டும். இதற்கு கேட்கட் எனும் பிரத்தியேக நூலால்தான் தைக்க வேண்டும். அது விலை உயர்ந்த ரகம்.. இறுதியில்தான் சில்க் நூல் பயன்படுத்தி தோலை மூட வேண்டும்.
மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தபோது எப்படியும் 450 வெள்ளி அவர்கள் கட்டவேண்டி வரும். தேநீர் அருந்த வந்த அவர்களிடம் அவ்வளவு பணம் இருப்பதில் அர்த்தமில்லை.முறைப்படி இதுபோன்ற வன்முறையில் காயம் உண்டானவர்களை நாங்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதே வழக்கம். காரணம் இதில் ஏதேனும் காவல்துறையினரின் வழக்கு விசாரணை இருக்க நேர்ந்தால் நாங்கள் சாட்சி கூற நீதிமன்றம் செல்லவேண்டி வரும். கிளினிக் வேலையை விட்டுவிட்டு இவ்வாறு நாங்கள் அலைந்துகொண்டிருக்க முடியாது. இது தனியார் கிளினிக்.
ஆனால் இவர்கள் சொல்வது உண்மையெனில் நேராக அரசு மருத்துவமனைக்கே சென்றிருக்கலாம். அங்கு அனைத்துமே இலவசம். அங்கு போகாமல் இங்கு வந்துள்ளதில் எதோ மர்மம் மறைந்துள்ளது என்பதையும் நான் அறிவேன். அங்கு சென்றால் நிச்சயமாக அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அனுப்புவார்கள். அதை சமாளிக்க இவர்களுக்கு பயம் உள்ளது.
தமிழ் இளைஞர்கள் என்பதால் உதவலாம் என்ற முடிவுடன், " இதை என்னால் சரி செய்ய முடியும் ஆனான் உங்களுக்கு நிறைய செலவாகும். மொத்தம் 450 வெள்ளி கட்டவேண்டும். முடியுமா உங்களால்? " என்றவாறு அவர்களில் முகங்களை நோட்டமிட்டேன். எல்லார் முகத்திலும் ஏமாற்றமே பிரதிபலித்தது.
" பேசாமல் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகலாமே? அங்கெ எல்லாமே இலவசமாச்சே? " அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை அறிய அவ்வாறு கேட்டேன். அங்கு நின்றிருந்த தேவகிகூட அதை ஆமோதிப்பதுபோல கண்ஜாடைக் காட்டினாள் .
தேவை இல்லாமல் நான் நான் உதவப்போவது குறித்து அவளுக்கு விருப்பம் இல்லை., இதை செய்து முடிக்க எப்படியும் ஒரு மணி நேரமாகும். அவள்தான் எனக்கு உதவியாக வேண்டும்.
அவர்கள் கண்கள் மூலமாகவே எதோ பேசிக்கொள்வது தெரிந்தது.
" டாக்டர் பணத்த பத்தி யோசிக்காதீங்க. நான் உளுதிராம் போய் பணம் கொண்டாறேன். " என்று கூறிய ஒருவன் விருட்டென்று வெளியேறினான்'.
" டேய் ...நானும் வரேண்டா ! " அவன்பின்னே இன்னொருவனும் வெளியே ஓடினான்.
உள்ளே நின்றுகொண்டிருந்த மற்றொருவனை நான்தான் வெளியே காத்திருக்குமாறு கூறினேன்.
சிதைந்துபோயிருந்த சதையைச் சீர்செய்யும் பணியில் நானும் தேவகியும் இறங்கினோம். ஹைட்ரோஜென் பெராக்ஸ்சைட் ஊற்றி காயத்தை கழுவுவியபின்பு லோக்கல் அனஸ்தீசியா உதவியுடன் தையல் போடுவதில் கவனம் செலுத்தினேன்.
நான் ஒவ்வொரு தையலை முடிச்சு போட்டதும் தேவகி சில்க் நூலை வெட்டிவிடுவாள் .



தமிழ் இளைஞர்தானே? பணம் வாங்குவதில் இவ்வளவு கண்டிப்பாக உள்ளீரே என்று நீங்கள் எண்ணுவது எனக்குத் தெரியாமல் இல்லை.. என்ன செய்வது? இது என் சொந்த கிளினிக் இல்லை. இதன் உரிமையாளன் ஒரு சீனன். பண விஷயத்தில் மிகவும் கறார்ப் பேர்வழி. இரவு நேரத்தில் இரண்டு மடங்காக வாங்கவேண்டும் என்பது உத்தரவு. அவனுக்குத் தெரியாமல் தேவகியும் நானும் பணம் வாங்கினால் அது அவனை ஏமாற்றுவதற்கு சமம். அத்தகைய நேர்மையற்றச் செயல்களில் நான் என்றுமே ஈடுபட்டதில்லை..
நான் எண்ணியபடியே தையல்கள் போட்டு முடிக்க ஒரு மணி நேரம் ஆனது. அப்போது மணி 2.30..குனிந்துகொண்டு அவ்வளவு நேரமும் தையல் போட்டதால் இடுப்பு வலித்தது. தேவகி கட்டுகள் போட்டுக்கொண்டிருந்தாள் . நான் மருந்துகள் எழுதி முடித்துவிட்டு வெளியே வந்தேன். அங்கு யாரையும் ( அவனது நண்பனை ) காணவில்லை. கிளினிக்கின் வெளியே ஒரு மோட்டார் சைக்கிள் நின்றது.
எதிர்வரிசை மூலையில் இருந்த ஸ்ரீ முருகன் உணவகம் சென்று தேநீர் அருந்த கிளம்பினேன். அங்கு வீதியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவனின் நண்பன் உட்கார்ந்திருந்தான்.
" என்னங்க டாக்டர்? முடிந்ததா? " என்னைப் பார்த்ததும் எழுந்து நின்றான்.
" ஆமாம். டீ குடிக்க வந்தேன்.. தனியாக உள்ளேயே பணம் கொண்டுவரப்போன உன் நண்பன் இன்னும் வரலையா? " வியப்புடன் கேட்டேன் .
" அதாங்க டாக்டர் காத்திருக்கேன். வந்து கொண்டிருக்கான்....நான் போய் அவனைப் பாக்கிறேன். நீங்க டீ குடிச்சுட்டு வாங்க டாக்டர். " இவ்வாறு கூறிவிட்டு கிளினிக் நோக்கி விரைந்தான்.
தேநீர் அருந்திவிட்டு மீண்டும் கிளினிக் நோக்கி சென்றபோது அங்கு அந்த மோட்டார் சைக்கிள் இல்லை.
என்னைக் கண்ட தேவகி ஓடிவந்து பதறினாள்.
" டாக்டர்! நான் மருந்து எடுத்துக்கொண்டிருந்தேன். வெளியில் மோட்டார் ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தேன். அந்த இருவரும் ஒன்றும் சொல்லாமல் ஓடிப்போய்விட்டார்கள்! பணம் கட்டவில்லை டாக்டர்! "
( முடிந்தது )

No comments:

Post a Comment