சிறுகதை ... மன்னிப்பு
மார்கழி குளிர் என்பார்களே, அதுபோன்ற குளிர்தான் அன்று இரவும். டிசம்பர் மாதம் இருபத்தி
மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை.. இரவு சுமார் பத்து இருக்கும். வீதியில் ஆட்கள்
நடமாட்டம் குறைவு.
கிளினிக் மூடும் நேரம். சாந்தா
கணக்கை முடித்துவிட்டு சாமான்களை அடுக்கிக்கொண்டிருந்தாள். நான் சற்று நேரம்
வெளியேறி வராந்தாவில் நின்றுகொண்டிருந்தேன். காலை ஒன்பது மணிக்கு வந்ததிலிருந்து
எவ்வளவு நேரந்தான் தொடர்ந்து இருக்கையில் அமர்ந்திருப்பது. அப்படி அமர்வதும்
தவறுதான். மூல வியாதியை அது உண்டுபண்ணிவிடும். அதற்கு இப்படி அவ்வப்போது எழுந்து
நடப்பது நல்லது. அப்போது அகமட் கழிவறை சென்றான். அவன் இரவு காவலன்.அந்த தேசா
செமேர்லாங் பகுதியில் திருட்டுகள் அதிகம்.
இப்படித்தான் ஒருமுறை இரவில்
நின்றபோது எதிர்வரிசையில் இருந்த கைத்தொலைப்பேசி கடைமுன் ஒரு கார் வேகமாக வந்து
நின்றது. அதிலிருந்து முகமூடி அணிந்த நால்வர் கைகளில் நீண்ட இரும்புக் கம்பிகளுடன்
திடு திடு என அந்த கடைக்குள் புகுந்தனர். இருவர் வெளியே காவல் காக்க மற்ற இருவரும்
கண்ணாடிப் பெட்டிகளை இரும்பால் அடித்து நொறுக்கி அதனுள் இருந்த அத்தனைக்
கைப்பேசிகளையும் அள்ளி ஒரு பையில் போட்டுக்கொண்டு உடன் வெளியேறி காரில் பறந்து
சென்றுவிட்டனர். எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்தேறியது. அதன் பிறகுதான்
நான்கூட அகமட்டை நியமனம் செய்துகொண்டேன்.
கிளினிக்கை ஒட்டியபடி ஒரு
சந்து . அங்கிருந்து ஒரு தமிழ் இளைஞன் வெளியேறினான். கருத்த மேனியும் கலைந்த
கேசமும் குரூரப் பார்வைகொண்டனாகத் தோன்றினான். அக்கம் பக்கம் யாரும் இல்லாத
காரணத்தால் மனதில் ஒருவிதமான பயம் எழவே செய்தது.
அங்கு அகமட் இருந்திருந்தால்
அந்த பயம் நிச்சயமாக எழுந்திருக்காது. அவன் இராணுவத்தில் இருந்தவன். மிகவும்
துணிச்சல்காரன்.
அந்த இக்கட்டான நேரத்தில் என்
கைப்பேசி ஒலித்தது. அதை கால்சட்டைப் பையில் இருந்து எடுத்து காதில் வைத்தபோது அவன்
என்னை நெருங்கிவிட்டான். என் மனைவிதான் அப்போது பேசினாள்.
திரும்பும்போது மறக்காமல்
ரொட்டியும் முட்டையும் வாங்கிவரச் சொன்னால். நான் சரி என்று சொல்லிவிட்டு
கைபேசியைக் கையில் வைத்துக்கொண்டு அவனைப் பார்த்தேன்.
என்னை நெருங்கி வந்தவன், " சார். கொஞ்சம் போன் பின்ஞ்சாம் தர முடியுமா? என்னுடையதில் கிரெடிட் முடிஞ்சிபோச்சி.அவரசரமாக வீட்டுக்கு
போன் பேசணும் ", என்றான்.
நான் எச்சரிக்கையானேன்.
கொடுப்பது ஆபத்து என்பது எனக்கு தெரிந்தது.
" பின் வரிசையில்தானே
செவென் இலவன் உள்ளது? அங்கிருந்துதானே வருவதுபோல் தெரிகிறது? அங்கு டாப் அப் செய்திருக்கலாமே? " இவ்வாறு கூறியவாறு அவனை நோக்கினேன்.
அவன் ஒரு நிமிடம் மௌனம்
சாதித்தான்.
சற்றும்
எதிர்ப்பார்க்காதவகையில், " குடுக்க மாட்டாயா? " என்ற
சத்தத்துடன் என் கையில் வைத்திருந்த கைப்பேசியை வெடுக்கெனெ பிடுங்க முயன்றான்.
இறுக அதைப் பற்றிருந்த என் கையை அவனும் இறுகப் பற்றினான். நான் ஒரு கணம்
நிலைதடுமாறிப்போனேன். சட்டென்று அவனை அப்படியே பின்னால் தள்ளி உதைத்தேன். இப்போது
அவன் நிலைதடுமாறினான்! வேகமாக எழுந்தவன் ஓட்டம் பிடித்தான்.
சத்தம் கேட்டு அகமட்
கழிவறையில் இருந்து வேகமாக ஓடிவந்து அவனைத் துரத்திக்கொண்டு ஓடினான்.
வீதியின் வளைவுவரை ஓடியவன்
திரும்பி வந்தான். அவன் எங்கோ சந்துக்குள் புகுந்து ஓடிவிட்டதாகச் சொன்னான்.
நான் அறைக்குத் திரும்பி வீடு
செல்வதற்கு தயார் ஆனேன்.
ஐந்து நிமிடங்கள் கூட
ஆகியிருக்காது.
" ஒரு அவசர கேஸ்
வந்துள்ளது டாக்டர் ! ". கதவைத் திறந்த அகமட் கூறினான்.
" சரி. வரச் சொல் "
என்றவாறு இருக்கையில் அமர்ந்தேன்.
சீனன் ஒருவன் கைத்தாங்கலாக
அவனை அழைத்துவந்தான்.
" என்ன ஆயிற்று? " என்றேன்.
" வேகமாக ஓடிவந்தவன் என்
காடியில் அடிபட்டுவிட்டான் ". என்று மலாய் மொழியில் கூறினான்!.
அவன் என்னை அச்சத்துடன் பார்த்து விழித்தான். அவனின் வலது
கரம் உடைந்து தொங்கியது.
No comments:
Post a Comment