Thursday 21 February 2013

டாக்டர் ஜி.ஜான்சன்
நள்ளிரவைத் தாண்டிய நேரம் அது. நன்றாக உறங்கிக்கொண்டிருந்தேன். அது பெர்மாஸ் ஜெயாவில் இயங்கிய 24 மணி கிளினிக். அதில் இரவில் தற்காலிகமாக கொஞ்ச நாட்கள் வேலை பார்த்தேன். இரவு 10 முதல் காலை 7 வரை அங்கு வரும் நோயாளிகளைப் பார்க்கவேண்டும். பெரும்பாலும் அதிகம்போனால் 10 பேர்களைப் பார்ப்பதே அபூர்வம் எனலாம். இதற்கு எதற்காக இப்படி இரவில் திறக்கவேண்டும் என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. இது பல தொழிற்சாலைகளுக்கு வாடிக்கையான ( panel ) கிளினிக். அதனால் அங்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இங்குதான் வருவர். எனது வேலை வரும் நோயாளிகளைக் கவனித்து அனுப்புவது. எனக்கு துணையாக உமா காலைவரை இருப்பாள்.
பதிவு செய்வது, கட்டு போடுவது, மருந்து கொடுப்பது, பணம் வசூலிப்பது, கணக்குகள் பார்ப்பது அனைத்தும் அவளின் வேலைதான்.
பெரும்பாலும் நள்ளிரவுவரை நோயாளிகள் வருவதுண்டு. அதன்பின் நாங்கள் முன்கதவை அடைத்துவிட்டு படுத்து விடுவோம். அவள் முன் அறையிலும் நான் பின் அறையிலும்தான் படுப்பது வழக்கம். நோயாளி வர நேர்ந்தால் அழைப்பு மணியை தட்டுவார்கள். நாங்கள் விழித்துக்கொள்வோம். நான் தூக்கம் வரும்வரை படிப்பதிலும் எழுதுவதிலும் இரவைக் கழிப்பேன். அவள் படுத்தும் நன்றாக தூங்கிவிடுவாள். சில இரவுகளில் நான்தான் அவளை எழுப்பிவிட நேரும். இவ்வாறு இரவைக் கழித்துவிட்டு காலையில் கையில் 200 வெள்ளியுடன் வீடு திரும்பி அவசர அவசரமாக வழக்கமான பகல் வேலைக்கு கிளம்பிவிடுவேன்!

வெளியில் இரைச்சல் கேட்டு விழித்தேன். அழைப்பு மணியும் மீண்டும் மீண்டும் ஒலித்தது. உமாவும் விழித்துக்கொண்டாள்.
" டாக்டர்! வெளியில் தமிழ்ப் பையன்கள். சண்டைபோல தெரியுது. பயமா உள்ளது! " உமா மெல்லியக் குரலில் தகவல் தந்தாள்.
அவள் பயந்துபோனதற்குக் காரணம் இருந்தது. இந்த அகால நேரத்தில் இப்படி கோஷ்டியாக வரும் தமிழ் இளைஞர்கள் பெரும்பாலும் குடி போதையில் வருவதோடு, பணம் கட்டும்போது தகராறும் செய்துள்ளனர். அவர்கள் பேசுவதும் கொச்சையாக இருக்கும்.கேட்ட வார்த்தைகள் சரளமாகவும் புரளும். இத்தகைய கசப்பான அனுபவங்கள்தான் அவளை பீதிக்குள்ளாக்கியது.
இந்த நேரத்தில் சண்டையா என நீங்கள் எண்ணலாம். அதற்கும் காரணம் உள்ளது. இங்கு புகழ்பெற்ற ஓர் இரவு கேளிக்கை விடுதி ( pub ) உள்ளது. தமிழரால் நடத்தப்படும் இந்த விடுதியில் ஏராளமான தமிழ் இளைஞர்கள் கூடுவதுண்டு. அவ்வப்போது சலசலப்புகளும் நிகழ்வது வழக்கம்.
" சரி...பதிவு செய்... என்னவென்று பார்ப்போம் . " நான் அவர்களைச் சந்திக்க தயாரானேன்.
அங்கே பெரும் இரைச்சல்!
": ஐ. சீ . எல்லாம் அப்புறம் தரோம்...மொதல்லே உள்ள விடுங்க..ரொம்ப சீரியஸ் ..."
எனக்குப் புரிந்து விட்டது. இது அந்த ரகம்தான். எப்படியாவது இவர்களை சமாளித்துவிடவேண்டுமன்று உமாவிடம் சைகை காட்டினேன்.
நான்கு தமிழ் இளைஞர்கள் ஒருவனைக் கைத்தாங்கலாகக் கூட்டிவந்தனர். அவனின் சட்டை இரத்தத்தால் நனைந்திருந்தத்து. இரத்த வாடையுடன் பீர் வாடையும் சேர்ந்து எனக்கு குமட்டலை உண்டுபண்ணியது. தரையில் இரத்தம் வழிந்தோடிய நிலையில் படுக்கையில் அவனைக் கிடத்தினோம்.
" டாக்டர்...சீக்கிரம் ஏதாவது செய்யுங்கள்.." இது ஒருவனின் குரல்.
" கழுத்துல வெட்டு டாக்டர்.!" இது இன்னொருவன் விளக்கம்.
" தையல் போடணும்! " மற்றொருவனின் ஆணை இது.
நான் கைகளில் உறைகள் மாட்டியபடி அவனின் கழுத்தைப் பரிசோதனை செய்தேன். ஆழமான வெட்டு அது. சதையைத் தாண்டி முக்கிய இரத்தக்குழாயும் துண்டிக்கப்பட்டிருந்தது.
கட்டப்பட்டிருந்த பழைய துணியை அவிழ்த்தபோது இரத்தம் பீரிட்டு அடித்தது. அதை கைகளால் அழுத்தி பஞ்சு துணி வைத்து இறுக கட்டினேன். ஆழமான அரிவாள் வெட்டு அது. கழுத்து சதை வெட்டுப்பட்டு தொங்கியது!
" என்ன ஆயிற்று? சண்டையா? போலீசில் ரிப்போர்ட் செய்தாச்ச? " அவர்களைப் பார்த்து கேட்டேன்.
" அதெல்லாம் ஒண்ணுமில்லை. கண்ணாடி ஜன்னலில் விழுந்துட்டான். அது கிழித்திடுச்சு . " ஒருவன் பொய் சொன்னான்.
" தையல் போடலையா டாக்டர்? " ஒருவன் கத்தினான்.
" காயம் ரொம்ப ஆழமாக உள்ளது .இரத்தக்குழாய் வெட்டு பட்டுள்ளது. அதை முதலில் கட்டினால்தான் இரத்தம் வெளியேறுவது நிற்கும்.அதை இங்கு செய்ய முடியாது. இதற்கு மயக்கம் தர வேண்டும்.அது இங்கு இல்லை . " என்று ஓரளவு விளக்கினேன்.
" இப்போ என்னதான் சொல்கிறீர்கள்? " இன்னொருவன் கத்தினான்.
" ஜெனரல் ஆஸ்பத்திரிதான் போகணும். வேறு வழியில்லை." உண்மையைத்தான் கூறினேன்.
" இது தெரியாமலா இங்கே வந்தோம்? அங்கே போனால் போலீஸ் கேஸ் ஆகிவிடும் என்றுதானே இங்கே வந்துள்ளோம்? இங்கே தையல் போடா முடியாது என்றால் எப்படி? " கோபமாகவே ஒருவன் கேட்டான்.
" இது சன்னலில் விழுந்த மாதிரி இல்லை . எங்களிடம் இப்படியெல்லாம் பொய் சொல்லக் கூடாது.இது மாதிரி அடிபுடி கேஸ் எல்லாம் நாங்கள் இங்கு பார்ப்பதில்லை . நீங்கள் தமிழ்ப் பையன்களாக இருப்பதால் உதவ நினைத்தேன். ஆனால் நான் என்ன செய்வது? இதை என்னால் இங்கு செய்ய முடியாதே? " மேலும் விளக்கினேன்.
" அப்போ நீங்க என்ன டாக்டர்? எங்கே மெடிக்கல் படிச்சீங்க? எதற்கு கிளினிக் தெறந்து வச்சிருக்கீங்க? " ஆவேசமாக கத்திக்கொண்டு என்னை நோக்கி ஓடிவந்தான்.
நான் அவனின் கையைப் பிடித்து ," தயவுசெய்து எல்லாரும் வெளியே போங்க. ஒருவர் மட்டும் உள்ளே இருந்தால் போதும். " இவ்வாறு கூறியவண்ணம் அவனை வெளியே கொண்டு போனேன். மற்றவரும் பின்தொடர்ந்தனர்.
கொஞ்சம் நிதானமாக இருந்தவன் மட்டும் அறைக்குள் இருந்தான்.
" இங்கே வசதி இருந்தால் நான் உதவ தயார்தான். அனால் வேறு வழி இல்லை. கால தாமதம் செய்தால் அதிக இரத்தம் வெளியேறி உயிருக்கே ஆபத்தாகலாம். உங்களின் நண்பன் மேல் உங்களுக்கு உள்ள அக்கறையை நான் அறிவேன். நண்பனைக் காப்பாற்ற வேண்டுமானால் உடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதே நல்லது. " அவன் பொறுமையுடன் கேட்டுவிட்டு வெளியேறினான்.
நான் A T T ஊசிபோட தயார் செய்தேன்.
வெளியே சென்றவன் மீண்டும் நண்பர்களுடன் உள்ளே வந்தான்.
" சரிங்க டாக்டர்...நீங்கள் சொன்னபடியே செய்கிறோம் . கொஞ்சம் ஓவரா சாப்பிட்டுவிட்டோம். நிதானம் இல்லாமே பேசிட்டோம். மன்னிச்சிகிங்க. " இந்த திடீர் மாற்றம் எப்படி நடந்தது என்பது புரியவில்லை.
கையில் ஊசியுடன் வெட்டு பட்டவனிடம் சென்றேன்
படுத்திருந்தவன் விருட்டென எழுந்துகொண்டான்
" ஊசியா டாக்டர்? ஐயோ வலிக்குமே ! " என்றவாறு இரண்டு கைகளையும் உயர்த்திக் காட்டினான்.
" தம்பி. சின்ன ஊசிதான் இது . வலிக்காது ." என்றவாறு நெருங்கினேன்.
அவன் எழுந்து ஓட முயன்றான்!
இரு நண்பர்கள் அவனை இறுக பிடித்துக்கொள்ள ஊசியைப் போட்டுவிட்டேன் வெற்றிகரமாக!
கையில் பிடித்திருந்த அந்த சின்ன ஊசியை அவர்களிடம் காட்டியபடி கூறினேன்.
" நீங்கள் அரிவாள் தூக்கி சண்டைக்கு போகிறீர்கள். ஆனால் இந்த ஊசியிடம் அந்த அரிவாள் தோற்றது பார்த்தீரா? அப்போ யார் பெரிய கேங்ஸ்டர்? நான்தானே? "
பெரிய வீரர்கள்போல் வந்தவர்கள் பெட்டிப்பாம்பாக வெளியேறினர்!

No comments:

Post a Comment