Thursday, 21 February 2013

காதலர் தின சிறப்புக் கட்டுரை
சங்கத் தமிழர்கள் போற்றிய காதல்
டாக்டர் ஜி,ஜான்சன்

காதல் இனிமையானது. தமிழர் வாழ்வில் காதல் இன்றியமையாதது. காதலையும் வீரத்தையும் போற்றி வளர்த்தவர்கள் தமிழர்கள்.
இன்று உலகமுழுதும் காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதன் வரலாறு விநோதமானது. ரோமர்கள் ஐரோப்பாவை ஆண்ட காலத்தில் போர்வீரர்கள் தேவை என்பதால் இளைஞர்கள் திருமணம் செய்துகொள்வது தடைசெய்யப்பட்டது. ஆனால் புனித வேலன்டைன் என்ற கத்தோலிக்க சந்நியாசி , இரகசியமாக திருமணங்கள் நடத்தி வைத்ததால் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரைக் கண்காணித்தவர் அஷ்டெரியாஸ் என்பவர். நோய்வாய்ப்பட்டிருந்த அவரின் மகளைக் குணமாக்கினார் வேலேன் டைன். அந்த பெண் மீது அன்புகொண்டார் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு தலை துண்டிக்கப்ப்படுமுன், " உனது வேலன்டைனிடமிருந்து " என்று அவளுக்கு எழுதி விடை பெற்றார். இதுவே காதலர் தினமானது.
இன்று உலகெங்கும் கொண்டாடப்படும் இக் காதலை நமது முன்னோர்களான சங்ககாலத் தமிழர்கள் எவ்வாறு போற்றியுள்ளனர் என்பதை சங்க இலக்கியங்களில் காணலாம்.
கி.மு. 300 முதல் கி.பி. 200 வரையிலான காலமே சங்ககாலம். இது சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்ட காலம் எனலாம்.
அப்போது எழுதப்பட்ட எட்டுத்தொகை நூல்களில் நற்றினை குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகம் எனும் காதலைக் கூறுபவை. மொத்தத்தில் 1862 அகப்பாடல்கள் உள்ளன.
இப்பாடல்களில் சில அற்புதமான நுணுக்கங்கள் கையாளப்பட்டுள்ளன.
அன்றைய தமிழகம் குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல் பாலை என்று ஐந்து வகையான நிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கொப்ப காதல் பாடல்களும் ஐந்து வகையான உரிபபோருள்கள் கொண்டுள்ளன.
அவை வருமாறு:
குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லை - ஆற்றிருத்தல் நிமித்தம்
மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
பெரும்பாலான பாடல்களில் தலைவன்,தலைவி, தோழி, நற்றாய் , செவிலித்தாய் ஆகிய கதை மாந்தர்கள் இருப்பார்கள்.

இவர்களின் தலைவன் தலைவியின் காதல் இருவகையான தன்மைகள் உடையன:
களவொழுக்கம் - தலைவனும் தலைவியும் மணம் நிகழ்வதன் முன்னர்க் கூடுதல்.
கற்பொழுக்கம் - தலைவனும் தலைவியும் மணம் கொண்ட பின்னர்க் கூடுதல்.
இவ்வாறு நாம் இன்று வியப்புறும் வகையில் அன்றைய தமிழர் காதலுக்கு அழகான இலக்கணம் வகுத்து இலக்கிய காதல் புரிந்துள்ளனர்.
அந்த காதல் பாடல்களின் இன்பத்தில் சற்றே லயிப்போம் வாருங்கள்!
கற்பவர் நெஞ்சைக் கொள்ளை கொள்ளச் செய்யும் இயல்புடையது குறுந்தொகை .தொட்ட இடமெல்லாம் மணக்கும் சந்தனம்போல், குறுந்தொகையின் எந்தப் பாடலும் பாடலின் எந்த வரியும் நினைக்க இனிக்கும் தன்மையுடையது.
இதோ குறுந்தொகையின் முதல் பாடல். இதை எழுதியப் புலவரின் பெயர் இறையனார்.
" கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழியோ
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே. "
இத்தகைய புலமை நிறைந்த தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ள இப் பாடலின் அர்த்தம் இதுதான்: " ஆகா! உனது கூந்தலின் அழகை என்ன என்று சொல்வேன்! அதன் மணத்தை என் என்பேன்! ஏ ! வண்டே! நீயே சொல். எனக்காகச் சொல்லாதே, மலர்கள் தோறும் சென்று சென்று ஆராயும் தன்மை உனக்கு உண்டே! அதனால் கேட்கிறேன். சொல்; எனது காதலி இருக்கிறாளே! மயில் போன்ற சாயலாள் ! முல்லை முறுவல் அழகி! இவளது கூந்தல் போல நறுமணங் கமழும் மலர் ஏதேனும் உண்டோ ? சொல்லு. "
பேராசிரியர் துரை.தண்டபாணியின் இந்த விளக்கத்தைப் படித்ததும் திருவிளையாடல் திரைப்படத்தில் சிவனும் நக்கீரரும் வாதிட்டது நினைவுக்கு வருகிறதா?
குறுந்தொகையின் மற்றொரு பாடல் உலகப் பிரசிதிப்பெற்று விளங்குவதாகும். இப்பாடல் லண்டன் மாநகரின் மெட்ரோ இரயில் வண்டிகளில் பொறிக்கப்பட்டுள்ள பெருமை கொண்டுள்ளது.
" யாயும் ஞாயும் யாராகியரோ!
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர் ?
" யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெய்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே ".
தன் காதல் மீது சந்தேகம் கொண்ட காதலியிடம் இவ்வாறு தலைவன் மொழிகின்றான் . " கண்ணே! என் தாய் யார்? உன் தாய் யார்? ஏதாவது உறவு உண்டா? என் தந்தை யார்? உன் தந்தை யார்? இவ்விருவருக்கும் முன் பின் ஏதாவது உறவு உண்டா? நீ யார்? நான் யார்? நம் இருவருக்கும் ஏதாவது பழக்கமுண்டா? அவ்விதமிருக்க நம் இருவர் உள்ளமும் ஒன்றாயின பார்த்தாயா? நம்மிடையே காதல் தோன்றியது பார்த்தாயா? செம்மண் நிலத்தில் மழைப் பெய்தால் என்னவாகும்? நீரும் செம்மண்ணும் பிரிக்க முடியாத ஒன்றாகும். நம் காதலும் அப்படித்தான் . எனவே பிரிதல் என்பது இல்லை.அஞ்சாதே, கவலை வேண்டாம் கண்ணே! " இதை எழுதியப் புலவரின் பெயர் தெரியாதலால் அவருக்கு செம்புலப் பெய்னீரார் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளார்.
இதுபோன்று குறுந்தொகையில் 400 பாடல்கள் அக்காலக் காதலை சிறப்பு செய்துள்ளன.
அடுத்த நூலான நற்றிணையிலும் 400 பாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் வாழ்க்கையிலும் காதல் நெறியிலும் ஒழுக்க நெறியைச் சாற்றும் தன்மையன.
நற்றிணையின் முதல் பாடலைப் பாடியவர் கபிலர். குறிஞ்சித் திணையில் பாடப்பட்டுள்ள இப்பாடல் வருமாறு:
" நின்ற சொல்லர் நீடு தோறு இனியர்
என்றும் என்தோள் பிரிபு அறியலரே ,
தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீம் தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை.
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந் தரளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உருபவோ செல்பறியலரே .
தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வானோ என பயந்த தோழி அதை தலைவியிடம் கூறியபோது, தலைவி அவளுக்கு கூறும் பதிலாக இதை எழுதயுள்ளார் கபிலர்.
" தோழி! என் தலைவர் எப்போதும் நிலைபெற்று விளங்கும் சொற்களை உரைப்பவர்.எல்லாக் காலத்திலும் இனிமை திகழ விளங்குபவர். எத்தன்மையினும் என்னைப் பிரியாதவர். தாமரை மலரில் உள்ள குளிர்ந்த மகரந்தத் தாதுக்களை நுகர்ந்து சந்தன மரத்தில் சேர்க்கும் தேன் கூடு போன்று அவருடைய பழக்கமானது இனிமையும் நறுமணமும் கொண்டு விளங்கும். நீர் இன்றி உலகம் இல்லாதது போன்று நம்மையன்றி வேறு எதுவும் காணாதவராகத் தலைவர் விளங்குபவர் . அவர் என்னுடைய நெற்றி பசலை கொண்டு வருந்துமாறு பிரிந்து செல்லுதற்கு அறியாதவர் . "
இதுபோன்று நற்றிணைப் பாடல்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
அகநானூறு பாடல்களும் 400 உள்ளன. அவையனைத்தும் காதல் வரிகள்தான்!
எல்லாவற்றுக்கும் மேலாக நம் வள்ளுவப் பெருந்தகையும்கூட காதலில் தமது கைவரிசையைக் காட்டியுள்ளார்.
காமதுப்பாலின் 1101 வது பாடலின் ஈரடியில் எல்லாவற்றையும் கூறி முடித்துவிட்டார்!
" கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உலா.
" கண்ணால் கண்டும், செவியால் கேட்டும், நாவால் உண்டும் ,மூக்கால் மோந்தும் ,மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும் ஒளிபொருந்திய வலையல்களையுடைய இப் பெண்ணினிடத்தே இருக்கின்றன ." என்று காதலி தரும் காதல் இன்பத்தைக் கூறுகின்றார் வள்ளுவர்!
காதல் பற்றிய அகப்பாடல்கள் அனைத்தும் கூற இப்பகுதி போதாது. காதல் குறித்து அவ்வளவு எழுதியுள்ளனர் நம் முன்னோர்கள் . இத்தகைய இனிய காதலை நாம் என்றும் போற்றி வளர்ப்போம் வாருங்கள்!
Reply
Forward
Dr.G.Johnson Johnson <drgjohnsonn@gmail.com>

No comments:

Post a Comment